பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

99

‘கலியாணத்தின் போது நடக்க வேண்டிய சம்பந்தி சண்டை இப்போதே நடந்துவிட்டதால் இனி கலியாணம் நடக்க வேண்டியதுதான் பாக்கி!' என்று நினைத்த காதலர்கள் இருவரும் தங்களைப் பார்த்து ஊர் சிரிப்பதை மறந்து, தங்களைத் தாங்களே பார்த்துச் சிரித்துக் கொள்வாராயினர்.

இப்படியாகத்தானே இவர்களுடைய காதல் 'ஊர் அறிந்த ரகசிய'மாய்ப் போக, பெண்ணைப் பெற்றவர் அப்போதும் தம் பிடிவாதத்தை விடாமல் தம்முடைய பெண்ணை வேறு ஒர் ஊருக்கு அழைத்துக்கொண்டு போய் அங்கே 'பரமசிவம், பரமசிவம்’ என்ற ஒரு பையனைப் பார்த்து, அவன் தலையில் பார்வதியைப் பலவந்தமாகக் கட்டி வைத்து தம் கடமையைத் தீர்த்துக்கொண்டதோடு, ஜாதியையும் ஒருவாறு காப்பாற்றி வைப்பாராயினர்.

இந்தச் செய்தியை அறிந்தான் பரஞ்சோதி; இப்படி நடந்த பின் ஒரு காதலன் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சாவுச் சேதியைக் கூட சந்தோஷமாக வெளியிடும் ஒரு தினசரியைத் தினந்தோறும் படித்து வந்ததன் காரணமாகத் தெரிந்து வைத்துக் கொண்டிருந்த அவன், ஒரு பாழுங்கிணற்றைத் தேடினான்; கிடைக்கவில்லை. ஒரு துளி விஷத்தைத் தேடினான்; கிடைக்கவில்லை. ஒரு முழம் கயிற்றைத் தேடினான்; கிடைத்தது. அவ்வளவுதான் ‘ஏன், காதலித்தோம்?' என்று தெரியாமல், ‘ஏன் சாகிறோம்?’ என்று கூடத் தெரியாமல், பதினெட்டு வயதுகூட நிரம்பாத அந்தப் பாவி மகன் தன் கழுத்தில் அந்தக் கயிற்றைச் சுருக்கிட்டுக் கொண்டு தொங்கிவிட்டான்!

இந்தச் செய்தியை அறிந்தாள் பார்வதி; இப்படி நடந்த பின் ஒரு காதலி என்ன செய்ய வேண்டும் என்பதை, தான் ஏற்கெனவே பார்த்த பல சினிமாப் படங்களிலிருந்து தெரிந்து வைத்துக் கொண்டிருந்த அவள், ஒரு முழம் கயிற்றைத் தேடினாள்; கிடைக்கவில்லை. ஒரு துளி விஷத்தைத் தேடினாள்; கிடைக்கவில்லை. ஒரு பாழுங்கிணற்றைத் தேடினாள்; கிடைத்தது. அவ்வளவுதான்;