பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/103

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

‘ஏன் காதலித்தோம்?’ என்று தெரியாமல், ‘ஏன் சாகிறோம்?' என்றுகூடத் தெரியாமல், அந்தப் பதினாறு வயது பாவி மகள் பாழுங் கிணற்றிலே விழுந்து சாக, ‘அது தற்செயலாக நிகழ்ந்த விபத்து!’ என்று கதை கட்டி, அவள் பெற்றோர் தற்கொலை செய்துகொண்ட குற்றத்திலிருந்து தங்கள் மகளையும் தங்களையும் ஒருங்கே காத்துக்கொண்டு அமைதியுறுவாராயினர்.

இந்த அருமையான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்ததுபோல் சீர்திருத்தவாதிகள் சிலர் கடச்சுட வந்து, சுடுகாட்டிலேயே சுடச்சுட ஒரு கூட்டத்தைக் கூட்டி, ‘பலி! ஜாதி வெறிக்கு இரு இளம் உயிர்கள் பலி!' என்று சுடச் சுடப் பேச, 'ஜாதி வெறிக்கு என்று மட்டும் சொல்லாதீர்கள்; பதினெட்டு வயதுக்கு முன்னரே காதலிக்க ஆரம்பித்துவிட்ட அறியாமைக்குப் பலி, அசட்டுத்தனத்துக்குப் பலி, அதிகப்பிரசங்கித்தனத்துக்குப் பலி என்றும் சொல்லுங்கள்!' என்பதாகத்தானே அங்கிருந்த ஒரு பெரியவர் அதை மறுத்துச் சொல்ல, 'அடி, அந்தப் பழம் பஞ்சாங்கத்தை! உதை, அந்த மூடப் பழக்க வழக்கத்தை!’ என்று அவர்கள் அவரை விரட்டிக்கொண்டு ஓடுவாராயினர்.

இந்த விதமாகத்தானே இவர்கள் கதை முடிய, உண்மையை அறியாத பரமசிவம் தன் மனைவியின் மரணத்தால் மனம் உடைந்து, ‘என் மனைவியைப் பலி கொண்ட பாழுங் கிணற்றுக்கு நானும் பலியாவேன்!' என்று பலியாக, அது சீர்திருத்தவாதிகள் உள்பட அனைவரையுமே சிந்தனைக்குள் ஆழ்த்துவதாயிற்று.'

பாதாளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘பார்வதிக்காகப் பரஞ்சோதி செத்தான்; பரஞ்சோதிக்காகப் பார்வதி செத்தாள்; பரமசிவம் ஏன் செத்தான்?' என்று விக்கிரமாதித்தரைக் கேட்க, ‘அறிவில்லாமல் செத்தான்!' என்று விக்கிரமாதித்தர் சொல்ல, பாதாளம் அவரிடமிருந்து தப்பி, மீண்டும் போய் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டுவிட்டது காண்க... காண்க... காண்க...