பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

103


பாதாளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘உபகாரம் செய்பவனுக்கு இந்த உலகத்தில் ஏன் இப்படி அபகாரம் வந்து சேருகிறது?" என்று விக்கிரமாதித்தரைக் கேட்க, 'உண்மை எது, பொய் எது என்று தெரிந்துகொள்ள முடியாத அளவுக்கு மனிதன் இப்போது நடிக்கக் கற்றுக் கொண்டுவிட்டதால்!' என்று விக்கிரமாதித்தர் சொல்ல, பாதாளம் அவரிடமிருந்து தப்பி, மீண்டும் போய் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டு விட்டது என்றவாறு... என்றவாறு... என்றவாறு...

16

பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன

கருடன் வந்து கண் திறந்த கதை

"விக்கிரமாதித்தர் மறுபடியும் முருங்கை மரத்தின் மேல் ஏறி, பாதாளத்தைப் பிடித்துக்கொண்டுவர, அது அவருக்குச் சொன்ன பதினாறாவது கதையாவது:

‘கேளுமய்யா, விக்கிரமாதித்தரே! கேளும் சிட்டி, நீரும் கேளும்! 'ஆலகால விடத்தையும் நம்பலாம், ஆற்றையும் பெருங் காற்றையும் நம்பலாம்' என்று ஆரம்பித்து, 'சேலை கட்டிய மாதரை நம்பொணாது மெய், நம்பொணாது மெய், நம்பொணாது மெய், காணுமே!' என்று முடியும் ‘விவேக சிந்தாமணி' பாடலை நீங்கள் கேட்டிருக்கிறீர்களல்லவா? அந்தப் பாடலை அப்படியே பின்பற்றி நடந்து வந்த கணவன் ஒருவன் அதிராமப்பட்டினத்திலே உண்டு. ‘முத்து, முத்து’ என்று பெயர் பெற்றிருந்த அவனுக்கு, 'மாரி, மாரி' என்று ஒரு மனைவி உண்டு. அந்த மனைவி சேலை கட்டியதால் தானோ என்னவோ, அவன் அவளை நம்புவதே இல்லை. அது மட்டுமல்ல; 'அவள் எப்போது தன்னை விஷம் வைத்துக் கொன்று விடுவாளோ?' என்று ஒரு காரணமும்