பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

இல்லாமல் ஒவ்வொரு நிமிஷமும் பயந்துகொண்டே இருந்த அவன், அவள் தனக்குப் பரிமாறும் உணவைக்கூட உடனே எடுத்துச் சாப்பிடுவதில்லை; நாய்க்கோ, பூனைக்கோ முதலில் ஒரு பிடியை எடுத்து வைத்து, அந்தப் பிடியை அது சாப்பிட்டு உயிருடன் இருந்த பின்னரே அவன் சாப்பிடுவான். இந்த விஷயம் அவளுக்குத் தெரியாது; அவளிடம் அவன் அதைச் சொல்லவும் இல்லை. ஆகவே 'வாயில்லாப் பிராணிகளிடத்தில் தன் கணவனுக்குள்ள பிரியம்தான் அதற்குக் காரணம் போலும்!' என்று அவள் எண்ணி வாளாவிருப்பாளாயினள்.

இந்த விதமாகத்தானே தன் உயிர் தன்னுடைய மனைவியால் பறி போகாமல் இருக்க, அவன் ஒவ்வொரு நிமிஷமும் எச்சரிக்கையுடன் இருந்து கொண்டிருந்த காலையில், ஒரு நாள் அவன் மனைவியாகப்பட்டவள் தன் ஊரில் அப்போது நடந்து கொண்டிருந்த ‘மாரியம்மன் திருவிழா'வுக்குத் தன்னை அழைத்துச் செல்லுமாறு தன்னுடைய கணவனை 'வேண்டு, வேண்டு' என்று வேண்ட, ‘சரி' என்று அவனும் அதற்குச் சம்மதிக்க, ஒரு நாள் கால்நடைப் பயணமுள்ள அந்த ஊருக்கு அவர்கள் இருவரும் மறு நாள் காலை கட்டுச் சாதம் கட்டிக் கொண்டு நடந்தே செல்வாராயினர்.

உச்சிப் பொழுது வந்ததும் அவர்கள் ஓர் ஆற்றங்கரை ஆல மரத்தடியில் உட்கார்ந்து, தாங்கள் கொண்டு வந்த கட்டுச் சாதத்தை அவிழ்க்க, 'நாய்க்கும் பூனைக்கும் இப்போது என்ன செய்யப்போகிறீர்கள்?' என்று மனைவியாகப் பட்டவள் சிரித்துக்கொண்டே கேட்க, ‘ஏன், காகம் இல்லையா?' என்று கணவனாகப்பட்டவன், தன் கையில் ஒரு பிடி சாதத்தை எடுத்துக்கொண்டு, ‘கா, கா' என்று கரைய, அதைக் கேட்டுக் காகங்களும் ‘கா, கா’ என்று பதிலுக்குக் கரைந்து கொண்டே வந்து, அவன் வைத்த சோற்றை உண்டு உயிருடன் இருக்க, அதற்குப் பின்னரே அவன் அப்போதும் உண்பானாயினன்.