பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

111

‘எல்லாம் அளவுக்கு மீறி ஆசை வைத்ததன் பலனடி, பலன்! இப்போதாவது உண்மை தெரிந்ததா, உனக்கு? நீயும் என்மேல் அளவுக்கு மீறி ஆசை வைக்காதே, உனக்கும் பைத்தியம் பிடித்தாலும் பிடிக்கும்!' என்று அவன் சொல்லிச் சிரிக்க, 'நீங்களும் என்மேல் அளவுக்கு மீறி ஆசை வைக்காதீர்கள்; உங்களுக்கும் பைத்தியம் பிடித்தாலும் பிடிக்கும்!' என்று அவளும் சொல்லிச் சிரிப்பாளாயினள்.'

பாதாளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, 'துன்புத்தில் பெருந் துன்பம் எது?' என்று விக்கிரமாதித்தரைக் கேட்க, ‘அன்பினால் வரும் துன்பந்தான்!' என்று விக்கிரமாதித்தர் சொல்ல, பாதாளம் அவரிடமிருந்து தப்பி, மீண்டும் போய் முருங்கை மரத்தின்மேல் ஏறிக்கொண்டு விட்டது என்றவாறு... என்றவாறு... என்றவாறு...

18

பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன

மணமகள் தேடிய மணமகன் கதை

“விக்கிரமாதித்தர் மறுபடியும் முருங்கை மரத்தின் மேல் ஏறி, பாதாளத்தைப் பிடித்துக்கொண்டுவர, அது அவருக்குச் சொன்ன பதினெட்டாவது கதையாவது:

‘கேளுமய்யா, விக்கிரமாதித்தரே! கேளும் சிட்டி, நீரும் கேளும்! ஐம்பது வயதைக் கடந்த பிரமுகர் ஒருவர் ஐயம்பேட்டையிலே உண்டு. ‘அம்பலவாணர், அம்பலவாணர்' என்று அழைக்கப்பட்டு, வந்த அவருக்கு மனைவி இல்லை; ‘அம்சா, அம்சா' என்று ஒரு மகள் மட்டுமே உண்டு. அந்த மகளாகப்பட்டவள் பட்டணத்திலே விடுதியில் தங்கிப் படித்துக்கொண்டிருக்க, இவராகப்பட்டவர் இங்கே ஒரு சமையற்காரனை மட்டும் வேலைக்கு வைத்துக்கொண்டு தனியாக இருந்து வருவாராயினர்.