உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

அந்த வயதில் அவருக்குத் தனிமை கசக்காமல் இருந்திருக்கலாம். ஏனோ தெரியவில்லை; கசந்தது. அதற்காக நாலுபேருக்குத் தெரிந்து பெண் தேடவும் அவருக்கு வெட்கமாகயிருக்கவே, அந்தக் காரியத்தை அவர் ரகசியமாக செய்ய விரும்பினார். 'அதற்கு என்ன வழி!’ என்று யோசித்துக்கொண்டே, ஒரு நாள் அவர் தினசரிப் பத்திரிகையொன்றைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்கையில், அதிலிருந்த ‘மணமகள் தேவை' என்ற விளம்பரம் அன்னார் கண்ணில்பட, 'அதுவே வழி, அதுவே வழி' என்று அந்த வழியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அதற்குமேல் செய்ய வேண்டிய முயற்சியை அவர் காதும் காதும் வைத்தாற்போல் செய்வாராயினர்.

‘ஐம்பது வயதுள்ள ஒருவருக்கு இருபத்தைந்து
வயதிலிருந்து முப்பது வயதுக்குள் ஒரு மணமகள்
தேவை. அவள் கன்னிப் பெண்ணாய்த்தான்
இருக்க வேண்டும் என்பதில்லை; விதவையாகவோ,
விவாகரத்துச் செய்து கொண்டவளாகவோகூட
இருக்கலாம். எழுதவும்: பெட்டி எண் 888, 'டிங்-டாங்’
சென்னை-2'

இந்த விதமாகத்தானே விளம்பரம் செய்துவிட்டு அம்பலவாணராகப்பட்டவர் ஒவ்வொரு விநாடியும் தபாற்காரரை எதிர்பார்த்துக்கொண்டிருக்க, அதற்கு முதல் தடவையாக வந்த பதில் கடிதங்களிலெல்லாம், 'ஏ கிழவா, உனக்கு இன்னுமா கலியான ஆசை தீரவில்லை?' என்றும், ‘அரை நூற்றாண்டு காலம் வாழ்ந்து விட்டாயே, அது போதாதா?’ என்றும் இருக்கவே, அவர் மனம் உடைந்து, ‘இதற்குத்தான் ஒரு குறிப்பிட்ட வயதுக்குமேல் வீட்டில் இருக்கக் கூடாதென்றும், காட்டுக்குப் போய்விடவேண்டும் என்றும் அந்தக் காலத்தில் பெரியவர்கள் அனுபவப்பூர்வமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்போல் இருக்கிறது!’ என்று அவர் வேத கால வாழ்க்கையை நினைத்து