பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

113

வேதனைப்பட்டுக் கொண்டிருக்கையில், இரண்டாவது தடவையாக வந்த பதில் கடிதங்களில் ஒன்று அவருடைய இதயத்தில் இன்பக் கிளுகிளுப்பை மூட்டவே, அதை ஒரு முறைக்கு இரு முறையாக அவர் விழுந்து விழுந்து படித்துச் சுவைப்பாராயினர்:

“என் பெயர் ஆனந்தி; வயது இருபத்து நாலே
முக்கால் அரைக்கால்-அதாகப்பட்டது, தாங்கள்
கேட்டிருந்த வயதிலே அரைக்கால் குறைவாகவே
என் வயது ஆகிறது. எனக்காகக் கடிதம் எழுத வேறு
யாரும் இல்லாததால் நானே எழுதுகிறேன். சும்மா
எழுதுவதாக நினைத்துவிடாதீர்கள்; வெட்கப்பட்டுக்
கொண்டுதான் எழுதுகிறேன். நான் கன்னிப்
பெண்ணல்ல; கைம்பெண்ணுமல்ல, 'வேறு என்ன
 பெண்?' என்று கேட்பீர்கள். விவாகமான பெண். ஆம்,
எனக்குக் கணவர் என்று ஒருவர் இன்னும் இருக்கிறார்.
அவர் அடிக்கடி பொடி போடுவார். தாம் போடுவதோடு
நிற்காமல் சில சமயம் எனக்கும் போட்டு, ‘அச், அச்!’
என்று என்னையும் நாலு தும்மல் தும்ம
வைப்பதில் அவருக்கு ஓர் அலாதி ஆனந்தம். அந்த
ஆனந்தம் எனக்குப் பிடிக்கவில்லை. சொல்லிப்
பார்த்தேன்; கேட்கவில்லை. ஆகவே, வேறு
வழியின்றி அவரிடமிருந்து விவாகரத்துக் கோரி
வழக்குத் தொடர்ந்தேன். விசாரணையெல்லாம்
முடிந்து தீர்ப்புக் கூறும் தறுவாயில் அந்த வழக்கு
இருந்து கொண்டிருக்கிறது. தற்போது நானும்
தனியாகத்தான் இருக்கிறேன். எனக்கும் தனிமை
கசக்கத்தான் கசக்கிறது. தாங்கள் விரும்பினால்
தங்களை நான் நேரில் வந்து சந்திக்கத் தயார்.
ஆனால், ஒரே ஒரு நிபந்தனை. நம்முடைய விவாகம்
மட்டும் என்னுடைய விவாகரத்துக்குப் பின்னரே
நடக்க வேண்டும். சம்மதமாயின் எழுதவும். மற்றவை
நேரில் - ஆனந்தி'

மி.வி.க -8