பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

115

‘அன்புள்ள என்று ஆரம்பித்த அவர், ‘அதற்குள் அன்பாவது, ஆசையாவது?’ என்று அந்தக் கடிதத்தைக் கிழித்து எறிந்துவிட்டு, இன்னொரு கடிதத்தை எடுத்து எழுதியதாவது:

‘ஆனந்திக்கு, உன் கடிதம் கிடைத்தது.
என்னுடைய முதல் மனைவி என்ன சொன்னாலும்
தலையாட்டிக் கொண்டிருந்த அனுபவம் எனக்கு
ஏற்கெனவே நிறைய உண்டு. நீ எதற்கும் அஞ்ச
வேண்டாம். நான் சொல்வதற்கெல்லாம் நீ தலை
யாட்டுவதாயிருந்தால், நீ சொல்வதற் கெல்லாம்
நானும் தலையாட்டத் தயார்! தயார்! தயார்! உடனே
புறப்பட்டு வா! புறப்படுவதற்கு முன்னால் எனக்கு
ஒரு கடிதம் எழுது. அடையாளத்துக்காக, 'வயோதி
கத்தில் வாலிபராகத் திகழ்வது எப்படி?’ என்ற
புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு நான்
முதல் வகுப்புப் பிரயாணிகள் அறையில் உட்கார்ந்
திருக்கிறேன். நீயும் பச்சை நிறப் புடைவையைக்
கட்டிக்கொண்டு வா; ஒருவரை ஒருவர் உடனே
தெரிந்து கொள்ள அது கொஞ்சம் உதவியாயிருக்கும்.
மற்றவை நேரில் - அம்பலவாணர்.’

இந்தவிதமாகத்தானே அன்றே ஆனந்திக்கு அவசர அவசரமாக ஒரு கடிதத்தை எழுதிப் போட்டுவிட்டு, அடுத்த நாள் காலையிலிருந்தே அவர் மீண்டும் விநாடிக்கு விநாடி தபாற்காரரை எதிர்பார்த்துக் கொண்டிருக்க, அந்தத் தபாற்காரருக்குப் பதிலாக அவருடைய மகள் அம்சா அவருக்கு எதிர்த்தாற்போல் வந்து நின்று, ‘என்ன அப்பா, இப்படிச் செய்துவிட்டீர்களே? ஸ்டேஷனுக்கு வண்டி அனுப்பச் சொன்னால் அனுப்பவேயில்லையே?’ என்று அங்கலாய்க்க, 'மறந்து விட்டேன், அம்மா! வயதாகி விட்டதோ இல்லையோ?' என்று அதற்கு மட்டும் தம் வயதின்மேல் பழியைப் போட்டு, அவர் அவளிடமிருந்து தப்பித்துக் கொள்வாராயினர்.