118
மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்
‘நான் விளையாட்டுக்குச் சொன்னால் அதை நிஜமென்று நம்பி இப்படி விழுந்துவிட்டீர்களே?' என்று சொல்ல, ‘இதையாவது நான் 'விளையாட்டு இல்லை', என்று நம்பலாமா, வேண்டாமா? என்று ஒரு முறைக்கு இரு முறையாக அவளைக் கேட்க, ‘நம்புங்கள், நம்புங்கள்!’ என்று அவளும் ஒரு முறைக்கு இரு முறையாகச் சொல்லி, அவரை மெல்ல அழைத்துக்கொண்டு வெளியே வருவாளாயினள்.
‘கடைசியாக ஒன்று' என்றார் அவர்; ‘என்ன?’ என்றாள் அவள். ‘எனக்கு ஒரு மகள் இருக்கிறாள்!’ என்றார் அவர்; ‘இருக்கட்டும்!’ என்றாள் அவள்.
‘பெயர் அம்சா!' என்றார் அவர்; 'அதாகப்பட்டது, அன்னமாக்கும்!’ என்றாள் அவள்.
‘பட்டணத்தில் உள்ள காலேஜில் அவள் படிக்கிறாள்!' என்றார் அவர்; 'படிக்கட்டும்; நன்றாய்ப் படிக்கட்டும்!' என்றாள் அவள்.
‘கோடை விடுமுறைக்காக அவள் ஊருக்கு வந்திருக்கிறாள்’ என்றார் அவர்; ‘வந்திருக்கட்டும்!' என்றாள் அவள்.
‘அவளுக்கு இன்னும் கலியாணமாகவில்லை!’ என்றார் அவர்; 'ஏன் ஆகவில்லை?' என்றாள் அவள்.
‘படிப்பு முடியட்டும் என்று காத்திருக்கிறேன்!' என்றார் அவர், 'அதெல்லாம் அந்தக் காலம்; கலியாணத்தை முதலில் முடித்துக்கொண்டு, படிப்பை அப்புறம் முடிப்பது இந்தக் காலம்!' என்றாள் அவள்.
‘அதற்கு அவள் தயாராயில்லை!' என்றார் அவர்; ‘தயாராக்குவது என் பொறுப்பு!' என்றாள் அவள்.
‘அது முடியாத காரியம்!' என்றார் அவர், ‘ஏன் முடியாத காரியம்?’ என்றாள் அவள்.
‘இப்போது நான் அவளுடைய சித்தியின் ஸ்தானத்தில் உன்னை வைப்பதாக இல்லை!' என்றார் அவர்; 'வேறு எந்த ஸ்தானத்தில் வைக்கப்போகிறீர்கள்?’ என்றாள் அவள்.