பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்


இவன் இப்படிக் கேட்டுவிட்டு வந்தால் அவர்களுக்கு எப்படி இருக்கும்? 'அப்படியா சமாசாரம்?’ என்று அடுத்தாற் போல் அவன் அண்ணனை அவர்கள் ஆத்திரத்தோடும் ஆவலோடும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவன் வந்ததும், ‘டேய், ஜாக்கிரதை! 'பங்காளியையும் பனங்காயையும் பதம் பார்த்து வெட்டு’ என்பார்கள்; நீ உன் தம்பியை அந்த மாதிரி பதம் பார்த்து வெட்டாவிட்டாலும் அவனுக்குக் கலியாணத்தையாவது பண்ணாமல் இரு. பண்ணினாயோ, பின்னால் உனக்குத்தான் கஷ்டம்!' என்பார்கள். அவனோ அவர்களுக்கு ஏற்றாற்போல், ‘பெரியவர்கள் சம்பாதித்து வைத்துவிட்டுப் போயிருக்கும் சொத்து; எத்தனையோ தலைமுறைகளாக அப்படியே இருந்துகொண்டிருக்கிறது. இவன் கலியாணத்தால் அது பிரிவானேன் என்றுதான் நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்!' என்று சொல்லி விட்டு வருவானாயினன்.

அவன் அப்படி; இவன் இப்படி. 'இதற்குமேல் அந்த வீட்டை இரண்டாக்க என்ன செய்யலாம்?' என்று ஊரார் அல்லும் பகலும் அனவரதமும் யோசித்தார்கள், யோசித்தார்கள், அப்படி யோசித்தார்கள். கடைசியில் ஒரு பேஷான யோசனை அவர்களுக்குத் தோன்றிற்று. அதற்காக அவர்கள் ராமனையும் எதிர்பார்க்கவில்லை; லட்சுமண னையும் எதிர்பார்க்கவில்லை. தங்களுக்குத் தாங்களே பேசிக் கொண்டார்கள். என்னவென்று?.....

‘உனக்குச் சங்கதி தெரியுமோ?' என்றாள் ஒருத்தி.

‘தெரியாதே!’ என்றாள் இன்னொருத்தி.

‘ஜானகி இருவருக்கும் தேவி, இரவில் மட்டும் பத்தினியாயிருக்கிறாளாமே?' என்றாள் மற்றொருத்தி.

‘இது என்னடியம்மா, புதுக் கதையாயிருக்கிறது! ‘ஐவருக்கும் தேவி, அழியாத பத்தினி' என்று திரெளபதியைச் சொல்லத்தான் நான் கேட்டிருக்கிறேன். ஜானகியை