பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

135

நெருங்கி, ‘ஏன் பெண்ணே, அப்படிச் சிரிக்கிறாய்?' என்று கேட்க, அவள் அவரை ஏற இறங்கப் பார்த்துவிட்டுத் திடீரென்று தேம்பித் தேம்பி அழ, 'இது என்ன வேடிக்கை! கொஞ்ச நேரத்துக்கு முன்னால் விழுந்து விழுந்து சிரித்தாய்; ‘ஏன் சிரிக்கிறாய்?’ என்று கேட்டால், தேம்பித் தேம்பி அழுகிறாயே? என்ன விஷயம்? என்ன நடந்தது?’ என்று அவர் வியப்புடன் கேட்க, அவள் மறுபடியும் சிரித்துக் கொண்டே சொன்னதாவது:

‘ஒரு நாள் மத்தியானம் வழக்கம்போல் நான் காட்டில் சுள்ளி பொறுக்கிக்கொண்டிருந்தேன். அப்போது ஏதோ ஒன்று பயங்கரமாக உறுமும் சத்தம் கேட்டது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். புதரில் பதுங்கியிருந்த புலி ஒன்று திடீரென்று என்மேல் பாய்ந்தது. எனக்கு ஒன்றும் புரிய வில்லை; 'ஐயோ, அம்மா!’ என்று அலறிக்கொண்டே குப்புறப் படுத்துக் கண்ணை மூடிக்கொண்டு விட்டேன். ‘டுமீல்' என்று ஒரு சத்தம் கேட்டது; விழித்துப் பார்த்தேன். எனக்கு அருகில் கையில் துப்பாக்கியுடன் வெள்ளைக்கார உடையில் யாரோ ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்தில் செத்துப்போன புலி கிடந்தது. நான் நன்றியுடன் அவரைப் பார்த்தேன்; ‘அந்தக் காலத்துப் பெண்கள் புலியை முறத்தால் அடித்து விரட்டியதாகச் சொல்வார்கள்; நீ என்னடாவென்றால் அதன் உறுமல் சத்தத்தைக் கேட்டவுடனே இப்படி விழுந்துவிட்டாயே?’ என்றார் அவர் சிரித்துக்கொண்டே. எனக்கு ரோசம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது. 'அந்தக் காலத்து ஆண்கள் யானையைக்கூட நேருக்கு நேராக எதிர்த்து நின்று அங்குசத்தாலேயே அதை அடக்கி ஆண்டார்களாம். இந்தக் காலத்து ஆண்கள் அப்படியா செய்கிறார்கள்? மறைந்திருந்து துப்பாக்கியால் அல்லவா சுடுகிறார்கள்!' என்றேன் விருட்டென்று எழுந்து நின்று. அதற்குமேல் அவர் ஒன்றும் பேசவில்லை; அசடு வழியப் போய்விட்டார்.