பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/140

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

137


நீண்ட நேரத்துக்குப் பிறகு வியர்க்க விறுவிறுக்க தடியார் திரும்பி வந்தார். ‘என்ன ஆயிற்று எலி?’ என்றேன் நான்; ‘விட்டேனா?' என்றார் அவர் மறுபடியும் மீசையைத் திருகி விட்டுக் கொண்டே. ‘அடித்துவிட்டீர்களா?' என்றேன்; ‘அடிப்பதாவது! அதுவரை எனக்கு எதிரே நிற்க அவ்வளவு தைரியமா அதற்கு?' என்றார். 'கடைசியில் என்னதான் ஆயிற்று?’ என்றேன்; ஓடிப் போய் வளைக்குள் புகுந்து கொண்டு விட்டது; ‘பாவம், போனாற் போகிறது!’ என்று நானும், 'ஜாக்கிரதை! இன்னொரு தடவை வெளியே வந்தாயோ, கொன்று விடுவேன் கொன்று!’ என்று அதை எச்சரித்து விட்டு வந்தேன்!' என்றார் அவர் மீண்டும் மீசையை முறுக்கி விட்டுக்கொண்டே. நான் சும்மா இருந்திருக்கக் கூடாதா? கீழே விழுந்து கிடந்த வெண்ணெயில் கொஞ்சம் எடுத்து அவரிடம் நீட்டினேன். 'எதற்கு?' என்றார்; 'இவ்வளவு பெரிய வீர சாகசத்தைச் செய்துவிட்டு, மீசையை வெறுமனே முறுக்கலாமா? கொஞ்சம் வெண்ணெய் தடவி முறுக் குங்கள்!' என்றேன்.

கோபம் பொத்துக்கொண்டு வந்து விட்டது அவருக்கு; ‘என்ன குறைச்சல் என் வீரத்துக்கு?’ என்று ஓர் எம்பு எம்பித் தம் கையிலிருந்த தடியை என்னை நோக்கி ஓங்கினார். எனக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது; 'சும்மா நிறுத்துங்கள்! மத்தியானம் காட்டில் ஒரு புலி என்மேல் பாய வந்தது; ஒரே குண்டில் அதைச் சுட்டுக் கொன்ற வீரர் தன் வீரத்தைப் பற்றி என்னிடம் ஒரு வார்த்தைக்கூடப் பேசவில்லை; நீங்கள் என்னடாவென்றால், இவ்வளவு பெரிய தடியை எடுத்துக்கொண்டு போய் ஓர் எலியைக்கூடக் கொல்லாமல் திரும்பி வந்துவிட்டு இத்தனை பேச்சுப் பேசுகிறீர்களே!' என்றேன். அவ்வளவுதான்; 'யாரடி அவன்? எதற்காக அங்கே வந்தான்? உனக்காக ஏன் புலியைக் கொன்றான்? உனக்கும் அவனுக்கும் என்ன உறவு? எப்போதிருந்து உறவு? சொல்லடி, சொல்?’ என்று என்னை அடிமேல் அடி அடித்ததோடு நில்லாமல், 'போ, அந்த வீரனுக்குப் பின்னாலேயே போ! இனிமேல் இங்கே