பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/143

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

'வேண்டாம்; அதை டீயாகப் போட்டுக்கொண்டு வந்து இங்கே வைத்து விடு!' அவர் கட்டளையிட, அந்தக் கட்டளையைச் சிரமேற் கொண்டு அந்த அம்மாள் அப்படியே போட்டுக் கொண்டு வந்து வைக்க, அதை அடிக்கொரு வாய் குடிப்பதும் கொட்டு கொட்டென்று விழித்துக் கொண்டிருப்பதுமாக அன்றிரவைத் தள்ளி விட்டுக் கொண்டிருந்தார் அவர்.

இந்த விதமாகத்தானே அவர் இருந்து வருங்காலையில், மணி பதினொன்று, பன்னிரண்டு என்று அடித்து, ஒன்று என்றும் அடித்தது. தம்மையும் மீறி 'ஆவ்’ என்று வந்த கொட்டாவிக்கு அவர் வழக்கம்போல் சிட்டிகை போட்டு ‘சென்ட் ஆப்' கொடுத்துவிட்டுத் திரும்பிப் படுத்தார். அதுகாலை இரண்டு முகமூடித் திருடர்கள் எங்கிருந்தோ வந்து அவருக்கு முன்னால் நிற்க, அவர் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்து கண்களைக் கசக்கி விட்டுக்கொண்டு பார்த்தார்.

அதற்குள் அவர்களில் ஒருவன் தன் கையிலிருந்த சவுக்குக் கட்டையை அவருடைய தலைக்கு நேராக ஓங்க, இன்னொருவன், 'எங்கே இருக்கிறது பணம்?’ என்று சைகை மூலம் கேட்க, ‘இவர்கள் எந்த ஊர் திருடர்களாயிருப்பார்கள்? இவர்களுக்கு இந்தியும் தெரியாது, இங்கிலீஷும் தெரியாது போல் இருக்கிறதே?' என்று நினைத்த அவர், 'அதோ இருக்கிறது!’ என்று நடுங்கிக் கொண்டே இரும்புப் பெட்டியைக் காட்ட, ‘எடு சாவியை, திற பெட்டியை!' என்று அவர்கள் மேலும் ஜாடை காட்டியே அவரை விரட்டுவாராயினர்.

பார்த்தார் பஞ்சாபகேசன்; அவர்கள் கையிலுள்ள சவுக்குக் கட்டை தம்முடைய மண்டையைப் பதம் பார்ப்பதற்கு முன்னால் இரும்புப் பெட்டியைத் தாமே திறந்து, அவர்கள் கேட்பதை கொடுத்துவிடுவதுதான் தமக்கு மரியாதை என்று நினைத்தார்; நினைத்ததும் எழுந்தார்; இரும்புப் பெட்டியை நோக்கி நடந்தார். எடுத்தார் சாவியை;