பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/144

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

141

திறந்தார் பெட்டியை. நல்ல வேளையாக அன்று வசூலான பணம் ஏதும் அதில் இல்லை; 'வெறும் பெட்டியாக இருக்கக் கூடாதே!' என்பதற்காக அதில் ஒரே ஒரு ரூபாயை மட்டும் போட்டு வைத்திருந்தார். அதை எடுத்து அவர்களிடம் தாராளமாகக் கொடுத்தார். அவர்கள் அதை அலட்சியமாக வாங்கி வீசி எறிந்துவிட்டு, ‘எடு நகையை!' என்று மேலும் சைகை காட்டினார்கள். மூக்கால் அழுதுகொண்டே அதிலிருந்த நகைகளையெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து அவர்களிடம் கொடுத்தார். அவற்றைப் பெற்றுக் கொண்டதும் அவர்களில் ஒருவன் ‘ஹஹ்ஹஹ்ஹஹ்ஹா’ என்று சிரிக்க, இன்னொருவன், 'காலையில் நானும் அண்ணாவும் ‘ஊட்டிக்கு உல்லாசப் பயணம் போகப் போகிறோம்; ஓர் இருநூறு ரூபாய் கொடுங்கள்!’ என்று எத்தனை கெஞ்சுக் கெஞ்சிக் கேட்டோம்? ‘கொடுக்கவே மாட்டேன்!' என்று சொன்னீர்களே, அப்பா! இப்பொழுது பார்த்தீர்களா, கேட்க கேட்க ஒவ்வொரு நகையாக எடுத்துக் கொடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள்!' என்று சொல்லிக் கொண்டே தான் அணிந்திருந்த முகமூடியைக் கழற்ற, அவனைத் தொடர்ந்து அவன் அண்ணனும் கழற்ற, ‘அயோக்கியப் பயல்களா, உங்கள் வேலைதானா இது? நானும் உங்களிடம் ஒன்றும் ஏமாந்துவிடவில்லையடா, ஏமாந்து விடவில்லை. என்ன நகைகளை எடுத்துக் கொடுத்திருக்கிறேன் என்று கொஞ்சம் வெளிச்சத்தில் வந்து பாருங்கள்; எல்லாம் போலி நகைகளடா, போலி நகைகள்!’ என்று தகப்பனாராகப் பட்டவர் விழுந்து விழுந்து சிரிக்க, அதைக் கேட்டுப் புத்திர சிகாமணிகளாகப்பட்டவர்கள் ‘விழி, விழி' என்று விழிக்க, 'போங்கடா, போக்கற்றப் பயல்களா! நீங்கள் முகமூடி போட்ட திருடர்கள் என்றால், நான் முகமூடி போடாத திருடன் என்பது உங்களுக்குத் தெரியாது போல் இருக்கிறது!’ என்று சொல்லிக்கொண்டே, அவர் மறுபடியும் போய்க் கட்டிலில் படுத்து, 'ஆவ்’ என்று மறுபடியும் வந்த கொட்டாவிக்கு வழக்கம்போல் ‘டக், டக்’ என்று சிட்டிகை போட்டு 'சென்ட் ஆப்’ கொடுப்பாராயினர்.'