பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

திருப்தியுடன் அங்கிருந்து செல்ல, 'கேளாய், பாதாளசாமி! இருபத்து மூன்று கதைகளுக்குப் பின்னால் நீ போட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டு வந்த நான், இருபத்து நான்காவது கேள்விக்கு மட்டும் பதில் சொல்லாமல் இருப்பேனா? அவசியம் சொல்லியிருப்பேன். சொன்னால் 'பாதாளத்தின் கதை இந்த யுகத்தில் முடியாது' என்று சொல்லி என்னைத் தடுத்தவன் யார் தெரியுமா? இதோ நிற்கிறானே, என் தம்பியும் என்னுடைய அந்தரங்கக் காரியதரிசியுமான சிட்டி, இவன்தான். இவனுடைய யோசனைப்படி நடந்திராவிட்டால் இவன் சொன்னதுபோல் உன்னுடைய கதையும் முடிந்திருக்காது; அந்தப் பிரம்மச் சாரியின் பிரார்த்தனையும் நிறைவேறி யிருக்காது!’ என்று விக்கிரமாதித்தர் சொல்ல, 'அந்தப் பதிலை இப்போதுதான் சொல்லுங்களேன்?' என்று பவானியாகப்பட்டவள் அப்போதும் அவரை விடாமல் கேட்க, 'வயிற்றுக்காக அங்கே பொய்யும், ஆத்மாவுக்காக இங்கே பிராயச்சித்தமும் செய்து கொள்ளும் அவன் உண்மையில் பக்தன் அல்ல; எத்தன். இந்தப் பிறவியில் தான் பிழைப்பதற்காக அவன் அங்கே நல்லவனாக நடித்து அதிகாரியைப் பார்க்க வருபவர்களை ஏமாற்றுகிறான்; அடுத்த பிறவியில் தனக்கு எந்த விதமான ஆபத்தும் நேர்ந்துவிடக் கூடாதே என்பதற்காக அவன் இங்கே பரம பக்தனாக நடித்துக் கடவுளையும் ஏமாற்றப் பார்க்கிறான்!' என்று விக்கிரமாதித்தராகப்பட்டவர் சொல்ல, ‘அதெல்லாம் ஒன்றுமில்லை; அவன்தான் அசல் மனிதன்! அப்படி இருப்பவனால்தான் இந்தக் காலத்தில் பிழைக்க முடிகிறது; அவனைப் போன்றவர்களைத்தான் இந்த உலகம் ‘உத்தமர்கள்' என்று போற்றுகிறது!' என்று பவானி சொல்ல, ‘நாய் வேண்டுமானால் அப்படிப் பிழைக்கலாம்; மனிதன் அப்படிப் பிழைக்கக் கூடாது!' என்று சொல்லிவிட்டு விக்கிரமாதித்தர் செல்ல, 'கடைசியாக ஒரு விண்ணப்பம்' என்று பாதாளசாமி தலையைச் சொறிவானாயினன்.