பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/151

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148


3

மூன்றாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் கோமளம் சொன்ன

கோபாலன் கதை

மூன்றாவது நாள் காலை போஜனாகப்பட்டவர் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் பெருத்துக் கொண்டே வந்த தம் தொந்தியைக் கவலையுடன் தடவிக் கொடுத்தவாறு உட்கார்ந்திருக்க, அதுகாலை யாரோ ஒரு பிச்சைக்காரன் 'என்னைப் பார்த்தீர்களா?’ என்பதுபோல் எலும்பும் தோலுமாக வந்து அவருக்கு எதிர்த்தாற்போல் நின்று, ‘ஐயா, தரும துரையே!’ என்று குரல் கொடுக்க, ‘இவன் தருமதுரையென்றால், நான் தருமதுரையாகி விடுவேனா?' என்பதுபோல் அவர் தொந்தி குலுங்கத் துள்ளி எழுந்து அவனை விரட்டுவதற்காக நாயைத் தேட, அது எங்கேயோ போயிருக்கக் கண்டு, தாமே நாயாகி அவனை ‘விரட்டு, விரட்டு’ என்று விரட்டிவிட்டு வந்து மீண்டும் அமர, அதுகாலை, 'குளிக்கவில்லையா, வெந்நீர் தயாராயிருக்கிறதே?' என்று சொல்லிக் கொண்டே அன்னார் மனையரசி 'அன்ன நடை'க்குப் பதிலாக ‘ஆனை நடை.' நடந்து அங்கே வர, 'இதோ வந்துவிட்டேன்!’ என்று அவரும் முக்கி முனகி எழுந்து சென்று குளித்து, பூஜை அறைக்குள் நுழைந்து, சுவாமி படங்களுக்குப் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 'நிஜக் கணக்கு நோட்டுக்க'ளெல்லாம் சரியாயிருக்கின்றனவா என்று ஒரு முறைக்கு இரு முறையாகப் பார்த்த பின், திருநீறுக்குப் பதிலாக முகப்பவுடரை எடுத்து நெற்றியில் ஒரு கீற்று இழுத்துக்கொண்டு