பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/152

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

149

வெளியே வர, அதுகாலை அவருடைய அருமை நண்பர் ஒருவர், "என்ன, பூஜையெல்லாம் முடிந்தாச்சா?" என்று இளித்துக் கொண்டே வந்து அவருக்கு முன்னால் நிற்க, "முடிந்தது, முடிந்தது!” என்று படு பவ்வியமாகத் தலையை ஆட்டியபடி அவரை வெளியே இருந்த நாற்காலி யொன்றில் உட்கார வைத்து, "இன்றையப் பத்திரிகையைப் பார்த்தீர்களா?" என்று சொல்லிக்கொண்டே காலைப் பத்திரிகை ஒன்றை எடுத்து அவருக்கு முன்னால் போட்டுவிட்டுத் தாம் மட்டும் உள்ளே போய் மூக்கு முட்டச் சாப்பிட்டுவிட்டு வந்து, "கொஞ்சம் முன்னால் வந்திருக்கக் கூடாதோ? நீங்களும் சாப்பிட்டிருக்கலாமே?" என்று அன்றைய 'முதல் பொய்'யை அன்னாருக்கு 'அங்குரார்ப்பணம்' செய்துவிட்டு ‘டிரஸ்' செய்துகொள்ள ஆரம்பிக்க, அதே சமயத்தில் அவருடைய காரியதரிசி நீதிதேவன் அங்கே பிரசன்னமாகி, ‘'நான் வந்தாச்சு!” என்று அறிவிக்க, "இதோ, நானும் வந்தாச்சு!" என்று அவர் தம் அருமை நண்பரை ‘அந்தர'த்தில் விட்டுவிட்டு, மிஸ்டர் விக்கிரமாதித்தரைப் பார்க்கத் தம்முடைய காரியதரிசியுடன் மலையில்லா மலைச் சாலைக்கு விரைவாராயினர்.

அங்கே அவர்கள் இருவரும் 'லிப்ட்'டில் ஏறி, மூன்றாவது மாடிக்கு வந்தகாலை, அந்த மாடியின் ரிஸப்ஷனிஸ்டான கோமளம் அவர்களை நோக்கிப் பறந்து வந்து, "நில்லுங்கள், நில்லுங்கள்!" என்று சொல்ல, ‘'சொல்லுங்கள், சொல்லுங்கள்!" என்று அவர்கள் இருவரும் அவளைத் தொடர்ந்து செல்ல, "கேளுங்கள், கேளுங்கள்!” என்று அவள் சொன்ன கதையாவது;

"கேளாய், போஜனே! 'கோபாலன், கோபாலன்' என்று ஒரு கல்லூரி மாணவன் கோபாலபுரத்திலே உண்டு. பி.காம். இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருந்த அவன் அடிக்கடி காணாமற் போய்க்கொண்டிருந்தான். அதாகப்பட்டது, யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் அவன் வீட்டை விட்டு