பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

அவள். வயது இருபதுக்கு மேல் ஆகிறது; இதுவரை அவள் தன்மேல் ஆண் வாடையே படக் கூடாது என்று இருக்கிறாள். அவளுடைய மாமன் மகன்தான் சிறிது நேரத்துக்கு முன்னால் நீங்கள் இங்கே பார்த்த அந்தப் பைத்தியம். அவனை யாரும் கவனிப்பதில்லை; அவன் யாரென்றுகூட அவர்கள் தெரிந்து கொள்வது கிடையாது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுவாமியை வழிபடுவதற்காக அவள் இங்கே வருவாள்! அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவளைப் பார்க்க அவனும் இங்கே வருவான். அவள் வரும்போது அர்ச்சகர் உள்பட ஆண் பிள்ளைகள் யாரும் இங்கே இருக்கக் கூடாது என்பது தருமகர்த்தாவின் உத்தரவு?’ என்று அவன் சொல்ல, 'அவள் ஏன் தன்மேல் ஆண் வாடையே படக் கூடாது என்கிறாள்?’ என்று விக்கிரமாதித்தர் கேட்க, 'அது அதிசயத்திலும் அதிசயமான கதை!’ என்று சொல்லிவிட்டு, அவன் சொன்னதாவது:

பண்டாரம் சொன்ன
பங்காரு கதை

‘தங்கவிட்டான் பட்டி, தங்கவிட்டான் பட்டி என்று ஒரு பட்டி உண்டு. அந்தப் பட்டியிலே, 'பங்காரு, பங்காரு’ என்று சொல்லா நின்ற ஒருத்தி, 'பெரியண்ணன், பெரியண்ணன்' என்று சொல்லா நின்ற தன் கணவனுடன் பெருமை பொங்க வாழ்ந்து வந்தாள். அப்படி வாழ்ந்து வருங்காலையில் ஒரு நாள் இரவு யாரோ ஒருத்தி வந்து அவள் வீட்டுக் கதவைத் தட்ட, ‘யார் அது?’ என்று கேட்டுக் கொண்டே வந்து அவள் கதவைத் திறக்க, ‘அம்மா, நான் வழி தவறி வந்துவிட்டேன். இன்றிரவு இங்கே தங்க எனக்குக் கொஞ்சம் இடம் கொடுங்கள்; பொழுது விடிந்ததும் போய் விடுகிறேன்!' என்று கதவைத் தட்டியவள் சொல்வாளாயினள்.