பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்


‘என் மனைவி ஒரு மாதிரி! நீயோ என்னைவிட அழகாயிருக்கிறாய். நடு இரவில் அவள் என்னை மறந்து உன்னைத் தேடி வந்தாலும் வந்துவிடக்கூடும். ஒன்று வேண்டுமானால் செய்; நீ பெண் வேடம் போட்டுக்கொள். உனக்கும் வம்பில்லை; எனக்கும் வம்பில்லை. 'நான் பார்க்கும்போது ஆணாயிருந்தவன் இப்போது எப்படி பெண்ணானாள்?' என்று என் மனைவி நினைப்பாளே என்று நீ கவலைப்பட வேண்டாம், உன்னை எழுப்பி வெளியே அனுப்பி விட்டதாகவும், உனக்குப் பின்னால் வந்த வேறு யாரோ ஒரு பெண்ணுக்குப் போனாற் போகிறதென்று கொஞ்சம் இடம் கொடுத்ததாகவும் நான் அவளிடம் சொல்லிவிடுகிறேன்!' என்று பெரியண்ணன் சொல்ல, 'நல்ல மனைவி, நல்ல கணவன்!’ என்று தனக்குள் சிரித்துக் கொண்டே வந்தவள் ‘ம்’ என்று தலையை ஆட்டி விட்டு, ‘விதியே!' என்று அவனுக்காகப் பெண் வேடம் தாங்குவதுபோல் தாங்கி, ‘இத்துடனாவது இவர்கள் இருவரும் ஆளை விடவேண்டுமே?’ என்ற கவலையுடன் அங்கே மீண்டும் படுப்பாளாயினள்.

பொழுது விடிந்தது; படுக்கையை விட்டு எழுந்து வந்தாள் பங்காரு. தான் ஆணாக்கிவிட்டுப்போன பெண் மறுபடியும் பெண்ணாகியிருப்பதைக் கண்டாள்; திடுக்கிட்டாள். அடுத்த கணமே ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்துவிட்டது அவளுக்கு. 'அடி, கள்ளி! நான் போட்ட ஆண் வேடத்தை ஏன் கலைத்தாய்? என் புருஷனை மயக்கவா?' என்று 'ஓ'வென்று இரைந்தாள்.

'ஐயையோ! நான் கலைக்கவில்லை, அம்மா! அவர்தான் வந்து, ‘என் மனைவி ஒரு மாதிரி!' என்று சொல்லி, இந்தப் பெண் வேடத்தைப் போட்டுக்கொள்ளச் சொன்னார்!' என்று அவள் கையைப் பிசைந்தாள்.

'அப்படியா சமாசாரம்?’ என்று அவள் திரும்ப, ‘என்ன சமாசாரம்?' என்று கேட்டுக்கொண்டே பெரியண்ணன் படுக்கையறையை விட்டு வெளியே வர, ‘என்னை நம்பாத