பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

169

உங்களுடன் இனி நான் ஒரு கணம்கூட வாழமாட்டேன்!’ என்று சொல்லிக்கொண்டே அவள் 'திடுதிடு'வென்று புழக்கடைக்கு ஓடி, அங்கிருந்த கிணற்றில் 'தொபுகடீர்' என்று குதித்து, மூன்று வாய் தண்ணீரை 'மொடக், மொடக்' கென்று குடித்து மூச்சு விடுவதை அக்கணமே மறப்பாளாயினள்!' என்பதாகத்தானே பண்டாரம் தன் கதையைச் சொல்லி முடிக்க, 'அந்த பங்காருக்கும் இந்த ரத்தினத்துக்கும் என்ன சம்பந்தம்?' என்பதாகத்தானே விக்கிரமாதித்தர் கேட்க, 'அங்கேதான் இருக்கிறது அதிசயத்திலும் அதிசயம்! அந்த பங்காருதான் இந்த ரத்தினமாம். முன் பிறவியில் பங்காருவாயிருந்த அவள், இந்தப் பிறவியில் ரத்தினமாகப் பிறந்திருக்கிறாளாம்!' என்று பண்டாரம் சொல்ல, 'அதற்கு ஏதாவது அடையாளம் காட்டினாளா?' என்று விக்கிரமாதித்தர் பின்னும் கேட்க, 'காட்டினாள், ஏதோ ஒர் இடிந்துபோன வீட்டையும், அதற்குப் பின்னாலிருக்கும் ஒரு பாழுங்கிணற்றையும் ‘இதுதான் நான் வாழ்ந்த வீடு; இதுதான் நான் விழுந்த கிணறு' என்று!' என்பதாகத் தானே பண்டாரம் சொல்ல, 'அங்கே அவளுக்குத் தெரிந்தவர்கள், உறவினர்கள் யாராவது இருந்தார்களா?' என்பதாகத்தானே விக்கிரமாதித்தர் பின்னும் கேட்க, 'இருந்தது ஒரு கழுதையும், அதன் குட்டியும். ஆனால் அவற்றுக்கு அவளைத் தெரியவில்லை; அவளுக்கும் அவற்றைத் தெரியவில்லை!' என்று பண்டாரமாகப்பட்டவன் சொல்ல, விக்கிரமாதித்தராகப் பட்டவர் சிரித்துக்கொண்டே அவன் தோளில் ஒரு தட்டுத் தட்டி, 'அந்த ரத்தினம் இந்தக் கோயிலைத் தவிர வேறு எங்கேயாவது போவதுண்டா?' என்று கேட்க, 'போவதுண்டு, பாலருவிக்குத் தினம் குளிக்க!' என்று பண்டாரம் சொல்ல, 'எங்கே இருக்கிறது அந்தப் பாலருவி?, என்று விக்கிரமாதித்தர் கேட்க, 'இங்கிருந்து தெற்கே இரண்டு கல் தொலைவில் இருக்கிறது!' என்று அவன் சொல்ல, 'நன்றி' என்று விக்கிரமாதித்தர் சொல்லி விட்டு, அந்தப் பைத்தியத்தைத் தேடி வெளியே வந்து சுற்றுமுற்றும் பார்ப்பாராயினர்.