பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/177

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

‘அப்படியொன்றும் விசேஷமாக நடந்துவிடவில்லை. பிரபல பத்திரிகையொன்றின் சினிமா நிருபர் இவர். நேற்று வெளிப்புறக்காட்சிகள் சிலவற்றைப் படம் பிடிப்பதற்காக இங்கே ஒரு சினிமா கோஷ்டி வந்திருந்தது. அதில் கலந்துகொள்வதற்காக இரவல் சங்கீத சாகித்ய சரச சல்லாப உல்லாச உதயஸ்ரீயும் வந்திருந்தாளாம். அவளுடைய அருமை பெருமைகளைப் பற்றித் தன் பாட்டனார் சொல்ல இவர் கேட்டிருக்கிறார். அதிலிருந்து அவளைப் பார்க்க வேண்டும், அவளுடன் பேசவேண்டும் என்று இவர் துடியாய்த் துடித்திருக்கிறார். அதற்கு இங்கே ஒரு சந்தர்ப்பம் வாய்த்ததும் அவளைப் பேட்டி காணப் போயிருக்கிறார். ‘நீங்கள் சாப்பிடும் இட்டிலியின் சுற்றளவு என்ன, காப்பியை அவுன்ஸ் கணக்கில் அளந்து குடிக்கிறீர்களா, அளக்காமலே குடிக்கிறீர்களா?' என்றெல்லாம் கேட்டுவிட்டுக் கடைசியாக ‘இப்போது உங்களுக்கு என்ற வயதாகிறது?' என்று கேட்டிருக்கிறார். அவள் 'பதினாறு!’ என்று ஒரு வார்த்தை சொன்ன பாவம், ‘ஆ!’ என்று அப்படியே மூர்ச்சை போட்டுக் கீழே விழுந்திருக்கிறார்! அவள் பயந்துபோய், ‘உதவி, உதவி, ஓடி வாருங்கள், ஓடி வாருங்கள்!’ என்று கீச்சுக் கீச்சென்று கூவ, நான் 'என்னவோ, ஏதோ' என்று ஓடிப் போய்ப் பார்த்தேன். 'மூர்ச்சை தானே?' என்று முகத்தில் குளிர்ந்த நீரைத் தெளித்து விசிறிப் பார்த்தேன். மூர்ச்சை தெளிந்துவிட்டது; பேச்சுத்தான் திரும்பவில்லை!' என்று வந்தவர் கையைப் பிசைய, 'கவலைப்படாதீர்கள்; என்னுடன் இருக்கும் பாதாளசாமி ஒரு கதை சொன்னால் போதும்; பேசா நிருபர் பேசும் நிருபராகிவிடுவார்!’ என்பதாகத்தானே விக்கிரமாதித்தராகப்பட்டவர் வந்தவருக்கு அபயம் அளிக்க, 'எங்கே அந்தப் பாதாளசாமி? கதையைச் சொல்லச் சொல்லுங்கள், சீக்கிரம்!' என்பதாகத்தானே பேசா நிருபரும், அவருடைய பேசும் தோழரும் அவன் கதையைக் கேட்கத் தயாராவாராயினர்.