பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/178

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

175

பாதாளசாமி சொன்ன
புது முகம் தேடிய படாதிபதி கதை

‘கோலிவுட், கோலிவுட் என்று சொல்லா நின்ற கோடம்பாக்கம் பதியிலே 'கோபதி, கோபதி' என்று ஒரு படாதிபதி உண்டு. அவர் தமக்காகப் புதுமுகத்தைத் தேடினாரோ, 'பைனான்ஷியர்'களுக்காகப் புது முகத்தைத் தேடினாரோ, அல்லது படத்துக்காகத்தான் புதுமுகத்தைத் தேடினாரோ அது எனக்குத் தெரியாது; எப்பொழுது பார்த்தாலும் புதுமுகத்தைத் தேடிக்கொண்டே இருந்தார். அங்ஙனம் தேடிக்கொண்டிருந்த காலையில், அவர் ஒரு நாள் 'கொஞ்சம் சுதந்திரமாகத் தாகசாந்தி செய்துவிட்டு வருவோமே!’ என்று தம் காரில் பெங்களுருக்குப் போக, அந்தச் சமயம் பார்த்து அங்கிருந்த ஒரு கடன்காரன் அவருடைய காரைப் பறிமுதல் செய்துகொள்ள, 'தேவுடா!' என்று அவர் திரும்பி வருங்காலை 'பிருந்தாவனம் எக்ஸ்பிர'ஸில் திரும்பி வருவாராயினர்.

இப்படியாகத்தானே அவர் திரும்பி வருங்காலையில், அதிஅதிஅதி ரூபரூபரூப செளந்தரியவதி ஒருத்தி தன் தாயுடன் அவர் இருந்த பெட்டிக்குள் ஏறி உட்கார, அவளைப் பார்த்த படாதிபதி, ‘இவள் சரோஜாதேவியாக இருப்பாளோ, கே. ஆர். விஜயாவாக இருப்பாளோ?’ என்று ஒருகணம் நினைத்து, மலைத்து-மறுகணம், 'இல்லையில்லை, இவள் ஜெயலலிதாவேதான்!' என்று பாவித்து, பூரித்து-பின்னர், ‘அவர்களில் யாரும் இவளுக்கு அருகில்கூட நிற்க முடியாது. இவள் யாரோ, என்ன பேரோ? ‘மேக்-அப்' இல்லாமலேயே இவள் அழகு 'கீ லைட்'டைப் போல ஜொலிக்கிறதே, ‘மேக்-அப்' போட்டால் 'ஆர்க் லைட்'டைப்போல ஜொலிக்கும் போலிருக்கிறதே? ஆகா! பெங்களுரிலே இவள் கிடைத்திருந்தால், ‘என் காரை 'ஜப்தி' செய்த கடன்காரனுக்கு முன்னால் இவளைக் கொண்டுபோய் நிறுத்தியிருந்தால்,