பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/180

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

177

விட்டுக்கொண்டே நிற்க, தாயும் மகளும் 'சட்'டென்று இறங்கி அவரைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே செல்வாராயினர்.

‘பாவி, என் உடம்பிலிருந்து உயிரைப் பிரித்து எடுத்துக் கொண்டு போவதுபோல் போகிறாளே! அடிக்கடி நடக்கும் ரயில் விபத்து இப்போது நடந்திருக்கக் கூடாதா? அதில் சிக்கி அந்தச் சண்டாளி மட்டும் செத்திருக்கக் கூடாதா? அப்படி ஏதாவது நடந்திருந்தாலும் அந்தப் பெண்ணுக்கு ஆறுதல் கூறுவதுபோல் கூறி, அவளைக் கோலிவுட்டுக்கு அடித்துக் கொண்டு போயிருக்கலாம். இப்போது அதற்கும் வழி யில்லையே! தாமும் இறங்கி அவர்களைத் தொடர்ந்து தான் என்ன பயன்? ‘குழந்தையின் பெயர் என்ன அம்மா?' என்று அத்தனை அருமையாகக் கேட்டதற்கே 'அவள் பெயர் தெரிந்து உமக்கு என்ன ஆக வேண்டும்?’ என்று அந்தக் கிராதகி எரிந்து விழுந்தாளே, அப்படிப்பட்டவள் தம்மிடம் அதற்கு மேல் என்ன பேசிவிடப் போகிறாள்? 'ஏதும் பேச வேண்டாம்!' என்பதற்காகத்தான் அவள் அப்படி எரிந்து விழுந்தாளோ, என்னவோ?’ என்றெல்லாம் யோசித்துக் கொண்டே படாதிபதி சுற்றுமுற்றும் பார்க்க, அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்தில் பளிச்சென்று ஏதோ மின்ன, 'ஆ! கிடைத்து விட்டது, கிடைத்தே விட்டது! அவள் கிடைக்காவிட்டாலும் அவள் பின்னலிலிருந்து நழுவி விழுந்த ஒரு திருகுப்பூ கிடைத்து விட்டது. கிடைத்தே விட்டது! இதைக் கொண்டாவது அவளை ஏதாவது செய்ய முடியுமா, எப்படியாவது கவர முடியுமா?’ என்று சட்டென்று அதை எடுத்துத் தம் சட்டைப் பையில் வைத்துக்கொண்டு, 'தாமும் இறங்கி அவர்களைத் தொடரலாமா? தொடர்ந்து போய் இதைக் கொடுக்கும் சாக்கில் அவர்களுடன் இன்னொரு முறை பேசிப் பார்க்கலாமா?' என்று நினைத்து, கனைத்து, இருமி, செருமி, 'எதற்கும் போய்த்தான் பார்ப்போமே!’ என்று அவர் துணிந்து வண்டியை விட்டு இறங்க, அது காலை 'எங்கே, எங்கே?’ என்று அவரைத் தேடும் கண்களுடன்

மி.வி.க -12