பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/182

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

179

வந்து உங்களை இந்தக் காட்பாடியில் பிடித்தேன். வாடகையைப் பற்றி உங்களுக்குக் கவலை வேண்டாம். மாதா மாதம் அதைக் கொடுக்க வேண்டுமென்ற அவசியமில்லை; படம் என்று ஒன்று எடுத்து முடித்து, வெளியிட்டு, அது ஓடினால் கொடுக்கலாம்; ஓடா விட்டால், ‘அடுத்த படத்துக்கு ஆகட்டும்!' என்று சொல்லி விடலாம். அதற்காக அவன் காரை 'ஜப்தி' செய்வதாயிருந்தாலும் தன் காரைத்தான் ஜப்தி செய்து கொள்ள வேண்டுமே தவிர, நம்மிடம் ஜப்தி செய்வதற்கும் ஒரு காரும் இருக்கப் போவதில்லை. ஆகவே, நமக்கு ஒன்றும் நஷ்டமில்லை; அவனுக்குத்தான் நஷ்டம். ‘அவன் போனால் போகிறான்’ என்று நாம் இன்னொரு பிரைவேட் டாக்சிக்காரனைப் பார்த்துக் கொள்ளலாம். வாருங்கள்; வந்து காரில் ஏறிக்கொள்ளுங்கள். வரும்போது எவ்வளவு கம்பீரமாகக் காரில் வந்தீர்களோ, அவ்வளவு கம்பீரமாகப் போகும்போதும் காரிலேயே போய் இறங்குங்கள்!' என்று அழைக்க, ‘நாலு டஜன் சோடா வாங்கி விட்டு நாற்பது டஜன் சோடா, என்று கணக்கு எழுதினாலும் இப்படி ஒரு ப்ரொடக்ஷன் எக்ஸிகியூட்டிவ் இந்த ஜன்மத்தில் தமக்குக் கிடைப்பானா?' என்று மெய் சிலிர்த்து, மேனி சிலிர்த்து அவர் அவனுக்குப் பின்னால் போவாராயினர்.

ஸ்டேஷனுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரைவேட் டாக்சியில் படாதிபதியை ஏற்றி உட்கார வைத்ததும், 'ஏன் ஒரு மாதிரியாயிருக்கிறீர்கள்?’ என்று ப்ரொடக்ஷன் எக்ஸிகியூட்டிவ் பிரபாகர் ஓர் 'இது'க்கு எப்பொழுதும் கேட்பதுபோல் அவரைக் கேட்க, அதுதான் சமயமென்று அவர் தாம் கண்ட 'புது முக'த்தைப் பற்றி அவனிடம் மூட்டை மூட்டையாக அவிழ்த்துவிட, அவ்வளவையும் பொறுமையுடன் கேட்டுவிட்டு, 'இவ்வளவுதானே, அவள் பெயர் என்ன?’ என்று அவன் அவரைக் கேட்க, ‘அதுதானே தெரியவில்லை, தெரிந்தால் ராமநாமத்தை ஜபித்துக்கொண்டிருப்பேனே!' என்று அவர் உதட்டைப்