பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/186

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

183

கொண்டே வந்து தீபநாயகி கதவைத் திறக்க, 'வாடியம்மா, தீபநாயகி! என்னைத் தெரிகிறதா உனக்கு? நான்தாண்டியம்மா, உன் மாமன் அம்மா எங்கே போய்விட்டாள்? என்று உறவுமுறை கொண்டாடிக்கொண்டே அவன் உள்ளே நுழைவானாயினன்.

அதற்குள் அடுக்களையிலிருந்த அபயம் அவனுடைய குரலைக் கேட்டு வெளியே வர, 'என்ன தங்கச்சி, என்னை மறந்து விட்டாயா?' என்று அவன் அவளைக் கேட்க, ‘யார் நீங்கள்?’ என்று அவள் குழம்ப, 'நான்தான் ஆரூரான்; உன் அருமை அண்ணன். அந்தமானுக்குப் போயிருந்தேன், இல்லையா? இருபது வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் திரும்பி வருகிறேன்!’ என்று அவன் அளக்க, அவள் அதை அப்படியே நம்பித் தன் கையிலிருந்த ஏனம் தன்னுடைய கையை விட்டு நழுவுவதுகூடத் தெரியாமல், ‘அண்ணா! அம்மா உன்னைப் பார்க்காமலே கண்னை மூடிவிட்டார்களே, அண்ணா!’ என்று ஓடோடியும் சென்று அவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டு கண்ணீர் வடிப்பாளாயினள்.

அப்புறம் என்ன, அந்தத் தீபநாயகியைக் கொண்டு வந்து கோபியிடம் சேர்ப்பது அப்படியொன்றும் கஷ்டமாயில்லை அவனுக்கு; ‘எல்லோரையும்போல இவளை நான் கலியாணம் செய்துகொண்டால் என்ன நடக்கும் இரண்டு பிள்ளைகள் பிறக்கும்; அவ்வளவுதான்! அதைவிட இவள் இருக்கும் கொள்ளை அழகுக்கு இவளை சினிமாவில் சேர்த்துவிட்டால் இப்படி ஆகிவிடலாம், அப்படி ஆகி விடலாம்!’ என்று அவன் அபயத்துக்கு ஆசை காட்ட, 'இனி என் இஷ்டம் என்ன அண்ணா இருக்கிறது? உன் இஷ்டம், அவள் இஷ்டம்!’ என்று அவள் ஒதுங்க, ‘இனி நீ தீபநாயகி இல்லை 'தீபஸ்ரீ!' என்று அந்தத் தீபஸ்ரீயை அழைத்துக் கொண்டு அவன் அக்கணமே கோலிவுட்டுக்குத் திரும்புவானாயினன்.