உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

என்று இன்னொருத்தி ஒப்புக்கொள்ளும்படியாகத் தேர்ந்தெடுத்து முடி சூட்ட இவ்வளவு பெரிய உலகத்தில் ஒருவரும் இல்லையா? என்று அந்தப் போட்டிக்கு ஏற்பாடு செய்தவர்களில் ஒருவர் கதற, ‘இதோ தந்தோம், தந்தோம், தந்தோம் அபயம்! இந்தச் சிக்கலான விஷயத்தில் தக்க முடிவு காண இந்தத் தரணியில் இருவரே உண்டு. அவர்களில் ஒருவர் விக்கிரமாதித்தர் ஏ டு இஸ்ட்; இன்னொருவர் அவருடைய காரியதரிசி சிட்டி. ஓடிப்போய் அழைத்து வாருங்கள், அவர்களை!’ என்று அங்கிருந்த அபயப் பிரதானி ஒருவர் கூற, அதை அந்தப் போட்டியின் தலைமை நீதிபதி அப்படியே ஏற்று, இந்த முப்பத்திரண்டு அடுக்கு மாளிகையை உடனே தன் சக நீதிபதிகளுடன் முற்றுகையிட்டு, மிஸ்டர் விக்கிரமாதித்தரையும் சிட்டியையும் அலாக்காகத் தூக்கித் தங்கள் ‘இம்பாலா’ காரில் போட்டுக் கொண்டு, அலங்கார் மாளிகையை நோக்கி விரையலாயினர்.

பார்த்தார் விக்கிரமாதித்தர்; தம்முடைய காரியதரிசி சிட்டியுடன் கலந்து ஆலோசித்தார். அவர் விக்கிரமாதித்தர் காதோடு காதாக ஏதோ சொல்ல, ‘அத்தனை அழகிகளும் மீண்டும் மேடைக்கு வந்து தங்கள் அழகைப் பளிச், பளிச் சென்று காட்டட்டும்!’ என்றார் விக்கிரமாதித்தர். அவ்வளவு தான்; ‘அன்ன நடையில் என்ன புதுமை இருக்கிறது?’ என்று நினைத்த அழகிகள் அத்தனை பேரும் ‘வான்கோழி நடை.’ நடந்து மேடைக்கு வர, சண்டைக்கு நின்ற அழகிகள் இருவரையும் சக நீதிபதி ஒருவர் மிஸ்டர் விக்கிரமாதித்தருக்கும் சிட்டிக்கும் சாடையாகச் சுட்டிக் காட்ட, ‘உதித்துவிட்டது, உதித்தே விட்டது!’ என்று சிட்டி துள்ளிக் குதிக்கலாயினர்.

‘என்ன உதித்து விட்டது?’ என்றார் விக்கிரமாதித்தர் மெல்ல.

‘யோசனை!’

‘என்ன யோசனை?’