பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/193

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

என்று ஆவலே உருவாய் அவனைத் தேட, 'இதோ இருக்கிறார் உங்கள் மகன், இதோ இருக்கிறார் உங்கள் மகன்!' என்று அவன் அன்பே உருவாய் அடுக்களையைக் காட்ட, அங்கே பாவி மகன் கரண்டியும் கையுமாக உட்கார்ந்து, சமையல் செய்து கொண்டிருப்பானாயினன்.

‘ஏண்டா, பாவி! கடைசியில் இந்த வேலைக்கா வந்து விட்டாய்?' என்று நான் அவனை வயிறெரிந்து கேட்க, ‘என்ன குறைச்சல் அப்பா, இந்த வேலைக்கு? வாத்தியார் வேலையைவிட இது நல்ல வேலையாச்சே!' என்று அவன் மனம் குளிர்ந்து சொல்ல, 'ஆமாண்டா, வரும்படிகூட இப்பொதெல்லாம் வாத்தியாரைவிட சமையற்காரனுக்குத்தான் அதிகமாயிருக்கிறது!’ என்று நானும் சொல்லிவிட்டு, ‘வாடா, போவோம்!' என்றேன். 'எங்கே?’ என்றான்; ‘வீட்டுக்கு!' என்றேன். 'எதற்கு?' என்றான்; 'இது என்ன கேள்வி? உனக்கு ஒரு கலியாணத்தையாவது பண்ணி வைத்து, நான் என்னுடைய கடனைத் தீர்த்துக்கொள்கிறேன், வாடா!’ என்று நான் அவனை அழைக்க, 'சரி, பெண்ணைப் பாருங்கள்; வருகிறேன்!' என்று அவன் சொல்ல, ‘அதுவரை?' என்று நான் ஒன்றும் புரியாமல் கேட்க, 'இவருக்கு உதவியாக நான் இங்கே இருக்கப் போகிறேன், அப்பா!’ என்று அவன் தன்னுடன் இருந்த 'மெய்வழித் தொண்ட'ரை எனக்குக் காட்ட, ‘ஏன், இவருக்கு உதவியாக இங்கே வேறு யாரும் இல்லையா?' என்று நான் கேட்க, ஆபீசிலிருந்து சீக்கிரமாக வீட்டுக்கு வந்தால், ‘ஏன் சீக்கிரமாக வந்தாய்?' என்று கேட்கவும், நேரம் கழித்து வந்தால், ‘ஏன் நேரம் கழித்து வந்தாய்?' என்று கேட்கவும் ஒரே ஒரு பாட்டி இவருக்குத் துணையாக இங்கே இருந்தாளாம். 'அவளுடைய தொண தொணப்பிலிருந்து தப்ப என்னடா வழி?' என்று இவர் யோசித்துக் கொண்டிருக்குங்காலையில் அவள், ‘நான் கண்ணை மூடுவதற்குள் காசி, ராமேஸ்வரத்துக்குப் போக வேண்டும்' என்று சொல்ல, 'அதுதான் சரியான சந்தர்ப்பம்!'