பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

195

ஏதோ சொல்ல ஆரம்பிக்க, ‘ஏன் தெரியாது, நன்றாய்த் தெரிகிறதே! நீங்கள்தானே சாட்சாத் சகுனி மாமா?' என்று விக்கிரமாதித்தர் பின்னும் சிரித்துக் கொண்டே கேட்க, 'ஆமாம்; ஆனால் இதுவரை நான் யாருடைய குடியையும் கெடுத்தது கிடையாது!’ என்று வந்தவரும் சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு, 'இந்த அநியாயத்தைக் கேளுங்கள்; இவ்வூர் நாடக சபையொன்றின் காரியதரிசி நான். எங்களுடைய முதல் நாடகமாகப் 'பாஞ்சாலி சபத'த்தை இன்று நாங்கள் அரங்கேற்றியிருக்கிறோம். அதில் எனக்குச் சகுனி வேடம். கதைப்படி நான் துரியோதனனுக்குப் பக்கத்தில்தான் இருக்கிறேன். இருந்து என்ன செய்ய? தருமர் வேடம் தாங்கியிருக்கும் சபைத் தலைவர் எங்களோடு சூதாடித் திரெளபதியைத் தோற்க மாட்டேன் என்கிறார்; அப்படியே ஆடினாலும் அவர் எங்களை வென்று விடுகிறார். இதனால் அங்கே ஏகப்பட்ட சிக்கல்! ஒரு பக்கம் துச்சாதனன் வேடம் தரித்த துணைத் தலைவர் வெறி பிடித்தவர் போல் மீசையை உருவி விட்டுக்கொண்டு நின்று, 'தருமர் சூதாட்டத்தில் திரெளபதியைப் பந்தயமாக வைத்துத் தோற்கத்தான் வேண்டும்; அவள் துகிலை நான் உரியத்தான் வேண்டும்!' என்று துடியாய்த் துடிக்கிறார்; இன்னொரு பக்கம் கிருஷ்ணன் வேடம் தரித்த துணைக் காரியதரிசி மந்தகாசச் சிரிப்புடன் நின்று, 'உரிந்தால் உரிந்து கொள்; அவள் மானத்தை நான் காக்கப் போவதில்லை!' என்று அமுத்தலாகச் சொல்கிறார். திரெளபதி வேடம் தாங்கிய நடிகையோ, அவர்கள் மூவரையும் வேடிக்கை பார்த்தபடி முகவாய்க்கட்டையில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறாள். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை; ‘இடைவேளைத் திரை'யை இழுத்து விட்டு விட்டு, இங்கே ஓடோடி வந்தேன்!' என்று தம் அவல நிலையை அழமாட்டாக் குறையாகச் சொல்லி அழ, 'அப்படியானால் நீங்கள் நிஜச் சகுனி இல்லையா?' என்று பாதாளசாமி வாயெல்லாம் பல்லாய்க் கேட்க, 'நிஜச் சகுனியாயிருந்தால்