பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/209

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

கிடையாது; தேர்தல் சமயத்தில் ஓர் எம். எல். ஏ. சீட்டுக்காகவோ, ஓர் எம். பி. சீட்டுக்காகவோ எந்த தலைவரின் வாலையாவது, காலையாவது பிடித்தாரா என்றால் அதுவும் கிடையாது. பின் என்னதான் செய்தார்?' என்றால், சொல்கிறேன் கேளும்: காலையில் பள்ளிக்கூடம் போகும் வரை நாலு ஏழைப் பிள்ளைகளுக்குச் சம்பளம் வாங்காமல் தொண்டைத் தண்ணீர் வற்றப் பாடம் சொல்லிக் கொடுப்பார்; மாலை பள்ளிக்கூடம் விட்டதும் பஸ்ஸை ஓடிப் பிடித்து ஏறி உட்கார்ந்து கொள்ளாமல், சாலையில் கிடக்கும் வாழைப் பழத்தோல்கள், கண்ணாடிச் சில்லுகள், தேய்ந்த லாடங்கள் ஆகியவற்றையெல்லாம் ஒன்று விடாமல் பொறுக்கி எடுத்துக் குப்பைத் தொட்டிகளில் போட்டுக் கொண்டே தம் வீட்டுக்கு நடந்து வருவார்; இடையே வழி தெரியாமல் யாராவது அலைந்தால் அவர்களுக்கு வழி காட்டுவார்; வெயிலில் யாராவது செருப்பின்றி நடக்க முடியாமல் தவித்தால், அவர்களுக்குத் தம்முடைய செருப்பைக் கழற்றிக் கொடுத்துவிட்டு அவர் செருப்பில்லாமல் திண்டாடுவார்; மழையில் யாராவது நனைந்தால் ஓடிப் போய் அவர்களுக்குக் குடை பிடித்து, அவர்களைக் கொண்டு போய் அவர்களுடைய வீடு வரை விட்டுவிட்டு வருவார்.

இப்படியாகத்தானே அவர் தொண்டு பிறருக்குப் பயன்பட்டு, அவருக்குப் பயன்படாமல் இருந்துவந்தகாலை, அவருடைய பெண்களிலே ஒருத்தி கலியாணத்துக்குத் தயாரானாள். அவளைத் தொடர்ந்து இன்னொரு பெண்ணும் அதே மாதிரி தயாரானாள். அடுத்தாற்போல் பையன் ஒருவன் எஸ். எஸ். எல். ஸி. பரீட்சையில் தேறிவிட்டு, 'இதற்குமேல் என்னை என்ன செய்யப்போகிறீர்கள், அப்பா? வேலைக்கு அனுப்பப் போகிறீர்களா, காலேஜுக்கு அனுப்பப் போகிறீர்களா?' என்று கேட்டுக்கொண்டு வந்து நின்றான். 'வேலைக்குப் போகக்கூடிய வயதை நீ இன்னும் அடைய வில்லையேடா, காலேஜில்தான் உன்னைச் சேர்க்க வேண்டும்!' என்றார் வாத்தியார். அவருடைய மனைவியோ,