பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/211

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

நானே ஒரு நாள் அவன் வீட்டுக்குச் சென்று நாசூக்காக விசாரித்துப் பார்த்தேன். ஏற்கெனவே கலியாணமானவனாம்; அவன் மாமனார் ஸ்கூட்டர் வாங்கிக் கொடுக்கவில்லை என்பதற்காகப் பெண்ணை அவருடைய வீட்டிலேயே வாழா வெட்டியாக விட்டு வைத்திருக்கிறானாம். அவனை நம்பி இவள் இந்த வீட்டை விட்டுத் தாண்டினால் என்னவாகும்? உங்கள் தலைப்பாகையல்லவா கீழே இறங்கிப் போகும்?' என்று அவள் அவரை எச்சரிக்க, ‘அப்படியா சமாசாரம்?' என்று அவர் திடுக்கிட்டுத் தம் தலையைத் தாமே தொட்டுப் பார்த்துவிட்டு, 'நல்ல வேளை, இப்போதெல்லாம் எந்த வாத்தியார் தலையிலும் தலைப்பாகை இல்லாததால் என் தலையிலும் தலைப்பாகை இல்லை!' என்று சற்றே திருப்தியுடன் சொல்லிவிட்டு, பையனுக்கு வேலை தேடுவதோடு, பெண்ணுக்கு மாப்பிள்ளையும் 'தேடு, தேடு’ என்று தேடுவாராயினர்.

இங்ஙனம் வேலையையும், மாப்பிள்ளையையும் சேர்ந்தாற்போல் தேடிக் கொண்டிருந்த காலையிலும் அவர் தம் வழக்கத்தை விடாமல் மாலை நேரங்களில் சாலையில் கிடக்கும் தேய்ந்த லாடங்களையும், உடைந்த கண்ணாடித் துண்டுகளையும் தேடிக்கொண்டிருக்க, அதை ஒரு நாள் அந்த வழியாக வந்த மிஸ்டர் விக்கிரமாதித்தர் பார்த்துவிட்டு, ‘என்னத் தேடுகிறீர்கள்?’ என்று ஒன்றும் புரியாமல் கேட்க, அவர் ஓர் அசட்டுச் சிரிப்புடன், ‘ஏதோ என்னாலான தொண்டு, சாலையில் கிடக்கும் தேய்ந்த லாடங்களையும் உடைந்தக் கண்ணாடித் துண்டுகளையும் தேடி எடுத்துக் குப்பைத் தொட்டியில் போடுகிறேன்!' என்று சொல்ல, 'அட, பாவி மனுஷா! போடவே போடுகிறாய், பக்கத்தில் ஒரு போட்டோகிராபரையாவது வைத்துக்கொண்டு போடக்கூடாதா?’ என்று விக்கிரமாதித்தர் கேட்க, ‘ஏன்?' என்று அவர் 'விழி, விழி' என்று விழிக்க, ‘வீடு பற்றி எரிந்தால்கூட அதில் விளம்பரத்துக்கு ஏதாவது ‘சான்ஸ்’ இருக்கிறதா என்று தேடும் காலமாச்சே இது? இந்தக்