பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/214

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

211

விக்கிரமாதித்தர் பின்னும் சொல்லி, அவரை அனுப்பி வைப்பாராயினர்.

அங்ஙனமே அப் பதவிகளை எட்டிப் பிடிக்க முயன்ற வாத்தியார் அதில் தோல்வியுற்று வந்து விக்கிரமாதித்தரைப் பார்க்க, 'கவலைப்படாதீர்! அடுத்தாற்போல் எந்தத் தலைவரின் வாலையாவது, காலையாவது பிடித்து, ஓர் எம்.எல்.ஏ. சீட்டோ, எம்.பி. சீட்டோ, இரண்டுமில்லையென்றால் ஓர் எம்.சி. சீட்டோ வாங்கப் பாரும்!' என்று விக்கிரமாதித்தர் சொல்லி யனுப்ப, அதிலும் வாத்தியார் தோல்வியுற்றுத் திரும்ப, 'இனி உமக்குள்ள ஒரே வழி நிதி சேர்ப்பதுதான். அந்த நிதியையும் உம்முடைய பேரால் சேர்த்துவிட முடியாது; யாராவது ஒரு தலைவரின் பேராலோ, பிரமுகரின் பேராலோதான் சேர்க்க முடியும். இதுதான் 'சிலை வைக்கும் சீசன்' ஆயிற்றே? யாருக்காவது சிலை வைக்கப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டு நிதி சேர்க்கப் பாருமே!’ என்று சொல்ல, 'அதற்கு நான் எந்தத் தலைவரைப் பிடிப்பேன், எந்தப் பிரமுகரைப் பிடிப்பேன்?' என்று அவர் கையைப் பிசைய, 'யாரையும் இப்போது பிடிக்க வேண்டாம். நீர்பாட்டுக்கு எந்தத் தலைவரின் பேரைச் சொன்னால் நிதி சேருமோ, அந்தத் தலைவரின் பேரைச் சொல்லி நிதி சேரும். சேரும்போதே கணக்கை எழுத வேண்டிய விதத்தில் எழுதி உமக்கு வேண்டிய வசதிகளை - அதாவது, இருக்க வீடு, பெண்ணுக்கு மாப்பிள்ளை, போக்குவரத்துக்கு ஒரு சின்னஞ்சிறு கார் இத்தியாதி, இத்தியாதி - தேடிக் கொள்ளும். அதற்குப் பின் மீதமான காசில் எந்தத் தலைவரின் பேரைச் சொல்லி நிதி சேர்த்தீரோ, அந்தத் தலைவரின் சிலையைச் செய்து வைத்துவிட்டு, ‘என்ன சொல்கிறீர்? உமக்குச் சிலை வேண்டுமா, வேண்டாமா?' என்ற அவரைக் கேளும். அவர் ‘தியாகி ஸ்டண்ட்' அடிக்க விரும்பினால், ‘வேண்டாம்’ என்பார்; அடிக்க விரும்பாவிட்டால், 'ஆனானப்பட்ட ஆண்டவனே பக்தனின் அன்புக்குக் கட்டுப்படும்போது,