பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

நான் உங்களுடைய அன்புக்குக் கட்டுப்படாமல் இருக்க முடியுமா?’ என்று திடீரென்று வந்த அடக்கத்துடன் சொல்வார். உம்மைப் பொறுத்தவரை இரண்டும் ஒன்றுதான். வசதிக்கு வசதியும் கிடைக்கிறது; 'சாதாரணத் தொண்டன்’ என்ற நிலையிலிருந்து, 'தலைசிறந்தத் தொண்டன்’ என்ற நிலைக்கு மட்டுமல்ல; 'ஒரு குட்டித் தலைவன்’ என்ற நிலைக்கும் உயர முடிகிறது. இப்போதைக்கு அது போதும். போம், போம்; போய் ஜமாயும்!' என்று விக்கிரமாதித்தர் அவரை உற்சாகப்படுத்த, ‘இதெல்லாம் மக்களை ஏமாற்றுவது போல் அல்லவா ஆகும்?’ என்று வாத்தியார் பின்னும் சொல்ல, 'மக்களும் சம்பந்தப்பட்டத் தலைவரை ஏதாவது ஒரு விதத்தில் ஏமாற்றத்தான் நிதி கொடுக்கிறார்கள். பரஸ்பரம் தெரிந்தே ஏமாற்றி, தெரிந்தே ஏமாந்து வாழும் காலம் இது. அதைப் பற்றி நீரும் நானும் யோசிப்பது வள்ளுவனாரின் குறளுக்கே விரோதமானது. அவர் என்ன சொல்கிறார்? ‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல், பல கற்றும் கல்லார் அறிவிலாதார்' என்றல்லவா சொல்கிறார்? போம் போம், யோசிக்காமல் போம்!’ என்று விக்கிரமாதித்தர் பின்னும் சொல்லி, அவரை அனுப்பி வைப்பாராயினர்.

காலத்திற்கேற்ற அன்னார் கருத்துப்படி, கருமமே கண்ணாய் நிதி சேர்த்த வாத்தியார் சகல வசதிகளையும் சீக்கிரமே பெற்று, 'சாதாரணத் தொண்டன்’ என்ற நிலையிலிருந்து 'ஒரு குட்டித் தலைவன்’ என்ற நிலைக்கு உயர, அங்ஙனம் உயர்ந்தகாலை, எம்.சி. சீட்டுகளும், எம்.எல்.ஏ. சீட்டுகளும், எம். பி. சீட்டுகளும் போட்டி போட்டுக் கொண்டு அவரைத் தேடித் தாமாகவே ஓடி வர, அவற்றை விடாமல் பிடித்து மேலும் மேலும் முன்னேறிக் கொண்டே வந்த அவர், மாதத்துக்கு ஒரு நாள் மறக்காமல் போட்டோகிராபர், பத்திரிகையாளர் ஆகியோருடன் வெயிலில் காய்பவர்களையும், மழையில் நனைபவர்களையும் ‘எதிர்கால அமைச்சர்' பார்ப்பதுபோல் பார்த்துக் கொண்டே திருவொற்றியூர் சாலைக்குத் தம் புத்தம் புதுக் காரில் சென்று,