பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

215

குடித்துவிட்டு, ஏதோ புண்ணிய தீர்த்தத்தைச் சாப்பிட்டு அதுவரை தான் செய்திருந்த பாவங்கள் அத்தனையையும் போக்கிக் கொண்டு விட்ட பக்தன் போல் அவன் அந்த வீட்டு ஹாலுக்கு வருவானாயினன்.

அங்கே பிரேமகுமாரி உட்காரும் சோபாவில் தானும் கொஞ்ச நேரம் உட்கார்ந்து, அவள் ஆடும் ஊஞ்சலில் தானும் கொஞ்ச நேரம் ஆடி, அவள் அழகு பார்க்கும் கண்ணாடியில் தானும் கொஞ்ச நேரம் தன் அழகைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, 'இந்த அறைதான் என் கண்மணி படுக்கும் அறையாயிருக்குமோ?’ என்று அடுத்தாற்போல் இருந்த அறையை அவன் சற்றே எட்டிப் பார்க்க, அங்கே அந்த அழகுராணி தன் அருமை நாய்க்குட்டியை ஆசையுடன் அணைத்தவாறு படுத்துக் கொண்டிருக்க, ‘அடாடாடாடா, அந்த நாய்க்குட்டி பெற்ற பேறுகூட நான் பெறவில்லையே? இந்த ஜன்மம் எடுத்தென்ன, எடுக்காமல் போயென்ன?' என்று அவன் தன்னையும், தான் எடுத்த ஜன்மத்தையும் ஏக காலத்தில் நொந்துகொண்டே திரும்ப, அதுவரை அவனைக் கவனித்துக் கொண்டிருந்த போலீசார் ஒன்றும் புரியாமல் அவனை நெருங்கி, 'யாரப்பா நீ? உன் பெயர் என்ன?’ என்று விசாரிக்க, ‘என் பெயர் நட்சத்திரதாசன், பிரேமகுமாரியின் ரசிகன் நான். ஏன், நீங்களும் அந்த நட்சத்திரத்தின் நட்சத்திர ரசிகர்களா என்ன?' என்று அவன் அவர்களைத் திருப்பிக் கேட்க, 'நாசமாய்ப் போச்சு, போ! ரசிகன் இப்படித்தான் நள்ளிரவில் வருவானா? நட, ஸ்டேஷனுக்கு!’ என்று அவர்களில் ஒருவன் அவன் கழுத்தைப் பிடித்துத் தள்ள, ‘பகலில் வந்தால்தான் வாசலில் நிற்கும் கூர்க்கா என்னை உள்ளே விட மாட்டேன் என்கிறானே!’ என்று அவன் அழுது புலம்ப, அந்தப் புலம்பலைக் கேட்டு விழித்துக் கொண்ட பிரேமகுமாரி, ‘இப்படியும் ஒரு மகாரசிகன் தனக்கு இருக்கிறானா?' என்று வியந்து, ‘யார் அங்கே?’ என்று தன் காரியதரிசிக்குக் குரல் கொடுக்க, ‘இதோ வந்துவிட்டேன்!' என்று காரியதரிசி ஓடோடியும் வந்து அவளுக்கு முன்னால்