பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/222

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

219

அதை வாங்கிப் பார்த்த அவள், ‘உள்ளே வந்து தொலையும்!' என்று சொல்லிவிட்டுப் போக, அதனால் உச்சி குளிர்ந்து போன அவன் அவளுடைய காரையும் முந்திக்கொண்டு உள்ளே 'ஓடு, ஓடு’ என்று ஓடுவானாயினன்.

காரை விட்டுக் கீழே இறங்கிய பிரேமகுமாரி, 'இந்த மனுவையெல்லாம் படித்துக் கொண்டிருக்க இப்போது எனக்கு நேரமில்லை; நான் போய் ‘ரெஸ்ட்' எடுக்க வேண்டும். என்ன விஷயம், சொல்லும்?’ என்று சற்றே வெகுண்டு கேட்க, 'கோடம்பாக்கம் ரயில்வே கேட்டை எடுத்தாலும் எடுத்தார்கள்; என்னைப் போன்ற ரசிகர்களுக்குப் பிடித்தது தலைவலி! உங்கள் தரிசனத்துக்காக நாங்கள் உங்களுடைய வீடு தேடி வந்து, உங்கள் வீட்டுக் கேட்டருகே நின்று தவம் செய்ய வேண்டியிருக்கிறது. அந்தத் தவத்தை நாங்கள் மறுபடியும் கோடம்பாக்கம் கேட்டருகிலேயே நின்று செய்யவேண்டும். அதற்காக இப்போது அங்கே கட்டப்பட்டிருக்கும் மேம்பாலத்தை உடனே இடிக்க வேண்டும். இடித்துவிட்டு மீண்டும் ரயில்வே கேட்டைக் கொண்டு வந்து அங்கே போடவேண்டும். அதற்குத்தான் இந்த மனு. இதில் நீங்களும் ஒரு கையெழுத்துப் போட வேண்டும்!' என்று நட்சத்திரதாசன் சொல்ல, ‘இதென்ன வம்பு, இவன் ஒரு மாதிரியான ஆசாமியாயிருப்பான் போலிருக்கிறதே?' என்று அவனை மேலும் கீழுமாகப் பார்த்த அவள், ‘இது உம்முடைய சொந்த முயற்சியா? இல்லை, ரசிகர் சங்கத்தின் முயற்சியா?' என்று கேட்க, ‘இரண்டுமில்லை; இது பிரேமகுமாரி மன்றத்தின் முயற்சி!’ என்று அவன் சற்றே வெட்கத்துடன் சொல்ல, ‘அந்த மன்றத்தின் தலைவர் யார்?’ என்று அவள் கேட்க, ‘தலைவரும் நானே; காரியதரிசியும் நானே; பொருளாளரும் நானே; அங்கத்தினரும் நானே!’ என்று அவன் அடுக்க, 'அப்படியா? இதில் கையெழுத்துப் போட்டால் உம்முடைய ‘லிஸ்ட்'டில் அல்லவா என்னையும் சேர்த்துவிடுவார்கள்?'