பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

என்று அவன் கொடுத்த மனுவை அவனிடமே அவள் திருப்பிக் கொடுக்க, அதற்குள் பித்தம் தலைக்கேறிவிட்ட அவன், ‘இனி நான் வேறு, நீ வேறா?’ என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு, ‘நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்; நீ பேச நினைப்பதெல்லாம் நான் பேச வேண்டும்!' என்று பாட ஆரம்பிக்க, 'தாங்காது; இனி தாங்கவே தாங்காது!' என்று நினைத்த அவள் தன் காரிய தரிசியைக் கை தட்டி அழைத்து, ‘இந்தப் பைத்தியத்தை எப்படியாவது வெளியே அனுப்பு!' என்று உத்தரவு போட்டுவிட்டு உள்ளே போவாளாயினள்.

‘அப்பா, நட்சத்திரதாசா! மரியாதையாக வெளியே போகிறாயா, இல்லையா?' என்று காரியதரிசி சற்று மரியாதைக் குறைவுடன் கேட்க, ‘மாட்டேன்; பிரேமகுமாரி இந்த மனுவில் கையெழுத்துப் போடும் வரை நான் இந்த இடத்தை விட்டுப் போகமாட்டேன்!' என்று அவன் அடம் பிடிக்க, 'போகாவிட்டால் போலீசுக்குப் போன் பண்ணுவேன்!’ என்று காரியதரிசி அவனை எச்சரிக்க, 'பண்ணு; தாராளமாகப் பண்ணு!’ என்று அவன் அதற்கும் அசைந்து கொடுக்காமல் அங்கேயே நிற்க, காரியதரிசி வேறு வழியின்றிப் போலீசுக்குப் 'போன்' செய்து விஷயத்தைச் சொல்ல, ‘எந்தப் பைத்தியமாயிருந்தாலும் அதனால் பிறருக்கு ஆபத்து நேராத வரை நாங்கள் ஒன்றும் செய்வதற்கில்லை!' என்று அவர்கள் கையை விரித்துவிட, அதற்கு மேல் என்ன செய்வதென்று காரியதரிசி பிரேமகுமாரியுடன் கலந்து யோசிப்பாராயினர்.

அதுகாலை மிஸ்டர் விக்கிரமாதித்தருடைய நினைவு அவளுக்கு வர, 'அவர்தான் இதற்கு ஏதாவது வழி காட்டக் கூடும்’ என்று அவர்கள் அவரை வரவழைக்க, அவர் எல்லாவற்றையும் அவர்களிடமிருந்து விசாரித்துத் தெரிந்து கொண்ட பின் நட்சத்திரதாசனையும் பிரேம குமாரியையும் ஒரு முறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ‘இவர் இங்கேயே