பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/226

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

223

அர்ச்சகர் ஓர் அசட்டுச் சிரிப்பை உதிர்க்க, 'தெரியாவிட்டால் என்ன? இன்று வெள்ளிக்கிழமை; சாயந்திரம் அவள் அவசியம் கோயிலுக்கு வருவாள். அவள் வரும்போதே அவளைச் சுற்றி ஒரு கூட்டம் சேரும்; அதிலிருந்தே அவள் தான் ஜதி ஜகதாம்பாள் என்பதை நீர் தெரிந்துகொள்ளலாம். அவளிடம் இந்த நவரத்தினமாலையைக் கொடுத்துவிடும். நாலு பேருக்குத் தெரிந்து கொடுக்காதீர்; ரகசியமாகக் கொடும்!' என்று சொல்லி அவர் தம் கைப் பையிலிருந்த நவரத்தினமாலையை எடுத்து அர்ச்சகரிடம் கொடுக்க, 'ஐயோ, இவ்வளவு பெரிய பொறுப்பை என்னிடம் ஒப்படைக்கிறீர்களே!' என்று அர்ச்சகர் அலற, 'அலறாதீர்! அதற்குத் தகுதியான ஆள் நீர்தான்; வேறு யாரிடமும் எனக்கு நம்பிக்கையில்லை. இதை நானே கொண்டு போய் அவளிடம் கொடுத்திருப்பேன். இதைக் கட்டி முடித்த ஆசாரி நானும் என் மனைவியும் பட்டணத்துக்குப் புறப்படுகிற நேரத்தில் இதைக் கொண்டு வந்து என்னிடம் கொடுத்தான். என் மனைவி வாயெல்லாம் பல்லாக, 'இது யாருக்கு?' என்றாள்; ‘சாமிக்கு!' என்று சொல்லி அவளைச் சமாளித்தேன். அவள் இப்போது வெளியே நிற்கும் காரில் உட்கார்ந்திருக்கிறாள். அவளுக்கு எதிர்த்தாற்போல் இதை நான் உம்மிடம் கொடுப்பதுதான் பொருத்தம்; வேறு யாரிடம் கொடுத்தாலும் அது பொருத்தமாயிருக்காது. பிடியும், பிடியும், எனக்கு நேர மாகிறது!' என்பதாகத் தானே அவர் அந்த நவரத்தின மாலையை அர்ச்சகரின் கையிலே 'திணி, திணி' என்று திணித்துவிட்டு, ஓட்டமும் நடையுமாக வெளியே செல்வாராயினர்.

மாலை வந்தது. கோயிலுக்கு வந்த ஜதி ஜகதாம்பாள் தனியாக வரவில்லை; நாலு தோழிகளுடன் வந்தாள். அந்தத் தோழிகளோ அதிசயத் தோழிகளாயிருந்தார்கள். அவர்களில் ஒருத்தியாவது அந்த ஜதி ஜகதாம்பாளுக்குக் கொஞ்சமாவது மாறுபட்டிருந்தார்களா என்றால், அதுதான் இல்லை; ஒரே அச்சில் வார்த்த மாதிரி அவர்களும் அவளைப் போலவே