பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

225

பெயருக்கே செய்து விடுங்கள்!’ என்று அவர்களில் ஒருத்தி சாவதானமாகச் சொல்ல, ‘என் அப்பா ஜலங் காணா ஈஸ்வரா! என்னை ஏண்டா பெயர் காணா அர்ச்சகனாகப் படைத்தாய்?' என்று சிவ நாமாவளியும், சிந்திய மூக்குமாக அவர் அந்த அர்ச்சனையைச் செய்து முடிப்பாராயினர்.

‘அதற்கு மேல் யோசிப்பதில் பிரயோசனமில்லை' என்று அர்ச்சகர் துணிந்து, அவர்களையே நேருக்கு நேராக நோக்கி, 'உங்களில் யார் ஜதி ஜகதாம்பாள் என்று நான் தெரிந்து கொள்ளலாமோ?' எனப் படுபவ்வியமாகக் கேட்க, 'அது கூடத் தெரியாமலா இங்கே நீங்கள் அர்ச்சகர் வேலை பார்க்க வந்திருக்கிறீர்கள்?’ என்று அந்த அழகு ராணிகள் குபீரென்று சிரிக்க, 'ஏண்டா, அதைக் கேட்டுத் தொலைத்தோம்?' என்று அர்ச்சகர் அவமானத்தால் அப்படியே குன்றிப் போவாராயினர்.

அதுகாலை பக்தகோடிகளோடு பக்தகோடியாக அங்கே வந்திருந்த ஊருக்குப் புதியவர் ஒருவர் அர்ச்சகருக்கு நேர்ந்த அவமானத்தைத் தமக்கே நேர்ந்த அவமானமாகக் கருதி, ‘ஏன் அம்மா, சிரிக்கிறீர்கள்? ஐவரும் ஒரே மாதிரியாக உள்ள உங்களில் யார் ஜதி ஜகதாம்பாள் என்று அவர் கேட்டதில் என்ன தவறு?' என்று கேட்க, 'அதைக்கூடத் தெரிந்து கொள்ளாமல் அவர் இங்கே அர்ச்சகராக வந்திருக்கிறாரே, அதுதான் தவறு!' என்று அவர்களில் ஒருத்தி சொல்ல, ‘நானும்தான் இந்த ஊருக்குப் புதிது; உங்களில் யார் ஜதி ஜகதாம்பாள் என்று எனக்குந்தான் தெரியாது. அதனால் இந்தக் கோயிலுக்கு நான் வந்தது தவறாகிவிடுமா?’ என்று அவர் திருப்பிக் கேட்க, ‘சந்தேகமென்ன, தவறுதான்!' என்று அதற்கும் சளைக்காமல் அவர்களில் இன்னொருத்தி அடித்துச் சொல்ல, ‘ஏது, பொல்லாத பெண்களாயிருப்பார்கள் போல் இருக்கிறதே, இவர்கள்!’ என்று நினைத்த அவர், 'அப்படியானால் உங்களில் யார் அந்த ஜதி ஜகதாம்பாள் என்பதை நீங்கள் யாருக்கும் சொல்லவே மாட்டீர்களா?' என்று கேட்க,

மி.வி.க -15