பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/231

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228

12

பன்னிரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் சாந்தா சொன்ன

சர்வ கட்சி நேசன் கதை

"கேளாய், போஜனே! ஒரு நாள் காலை எங்கள் விக்கிரமாதித்தர் வெளியே செல்லத் தயாராகிக் கொண்டிருந்த காலை, ‘பார்வையாளர் அறை'யைச் சேர்ந்த பையன் ஒருவன், அவரைப் பார்க்க வந்திருந்த யாரோ ஒருவர் பூர்த்தி செய்து கொடுத்த 'பார்வையாளர் சீட்டு' ஒன்றைக் கொண்டு வந்து அவரிடம் கொடுக்க, அதை அவர் வாங்கிப் பார்க்க அதில் கண்டிருந்ததாவது:

பெயர் : சர்வகட்சி சாரநாதன்

விலாசம் : இன்பசாகரம், கபாலீஸ்வரம்

விஷயம் : புத்தக விஷயம்

‘இதென்ன வேடிக்கை? பெயரைப் பார்த்தால் சர்வ கட்சி சாரநாதனாயிருக்கிறது! விலாசத்தைப் பார்த்தால் இன்ப சாகரம், கபாலீஸ்வரமாயிருக்கிறது! 'இன்பசாகரம்’ என்றால் தாதுபுஷ்டி லேகியம், மாத்திரை-இப்படி ஏதாவது செய்து விற்பவராயிருப்பாரோ என்னவோ, தெரிய வில்லையே? அப்படி ஏதாவது இருந்தால் விஷயம் ஏன் புத்தக விஷயமாயிருக்கப்போகிறது? என்று பலவாறு சிந்தித்து, ஒன்றும் புரியாமல் தம்மைத் தாமே நிந்தித்து, 'எதற்கும் வீடு தேடி வந்த ஆசாமியைப் பார்த்துத்தான் வைப்போமே!’ என்று எண்ணியவராய், 'உள்ளே வரச் சொல்!' என்று அவர் பையனிடம் சொல்லி அனுப்புவாராயினர்.