பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/235

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

'தேவகோட்டை அண்ணாமலை, தேவக்கோட்டை அண்ணாமலை' என்று சொல்லா நின்ற ஒரு பிரமுகர் ஏதோ காரியமாக மிஸ்டர் விக்கிரமாதித்தரைப் பார்க்க வர, அவரைக் கண்டதும் சர்வகட்சி சாரநாதன் தன் முதுகில் யாரோ திடீரென்று அறைந்தாற்போல் துடித்து, நெளிந்து, 'ஆத்தாடி!’ என்று தன் முதுகைத் தானே தேய்த்துவிட்டுக் கொள்ள, விக்கிரமாதித்தர் ஒன்றும் புரியாமல், ‘ஏன், என்ன விஷயம்?' என்று திகைக்க, ‘ஒன்றுமில்லை; ஒன்றுமில்லை!' என்று அவர் இளிக்க, தேவக்கோட்டை அண்ணாமலையாகப் பட்டவர் சிரித்துக்கொண்டே, 'அவர் அதைச் சொல்ல மாட்டார்; நான் வேண்டுமானால் சொல்கிறேன்?' என்று தொடங்கி, 'சிறு வயதில் இந்தப் பிள்ளையாண்டான் என் புத்தகக் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். வி.பி.பி. ஆர்டர் ஏதாவது வந்தால் அதற்குரிய புத்தகத்தை என் கடையிலிருந்து எடுத்து அனுப்பிவிட்டு, பணத்தைத் தவறுதலாகத் தன் அறையின் விலாசத்துக்கு வரவழைத்துக் கொண்டு விடுவது இவனுடைய வழக்கம். இதை அறிந்த நான் இவனை ஒரு நாள் முதுகில் அறைந்து, கடையை விட்டே விரட்டிவிட்டேன். அதிலிருந்து என்னை எங்கே கண்டாலும் இவன் தன் முதுகை இப்படித்தான் தேய்த்து விட்டுக்கொள்வது வழக்கம்!' என்று நாசூக்காகக் குட்டை உடைக்க, 'மனுஷன் அந்த மட்டும் 'தவறுதலாக' என்று ஒரு வார்த்தை சேர்த்துச் சொல்லிவைத்தாரே!' என்று சர்வகட்சி சாரநாதனாகப்பட்டவர் வழக்கம்போல் சிரித்து, 'ஆமாம், ஆமாம்; தவறுதலாகத்தான் அப்படி நான் செய்து விட்டேன்!’ என்று சமாளிக்க, 'தவறு செய்தாலும் அதைச் சரியான முறையில் செய்திருக்கிறீர்! பணத்தை வேறு யாருடைய விலாசத்துக்காவது போய்ச் சேரும்படியான தவற்றைச் செய்துவிடாமல், உம்முடைய விலாசத்துக்கே வந்து சேரும்படியான தவற்றையல்லவா செய்திருக்கிறீர்!’ என்று விக்கிரமாதித்தர் சமாதானம் சொல்ல, 'ஆமாம் ஆமாம்; முதலில் நீங்கள் அவரைக் கவனித்து அனுப்புங்கள்!' என்று