பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

233

சர்வகட்சி சாரநாதன் தேவகோட்டை அண்ணாமலையை அவருக்குத் தெரியாமல் சுட்டிக் காட்ட, விக்கிரமாதித்தரும் அப்படியே அவரைக் கவனித்து அனுப்ப, சர்வகட்சி சாரநாதனாகப்பட்டவர் விட்ட இடத்திலிருந்து தொட்டுக் கொண்டு சொன்னதாவது:

‘...... காங்கிரஸ் சீசன் போய் இலக்கிய சீசன் வந்தது. அந்த சீஸனுக்குத் தகுந்தாற்போல் ஏதாவது புத்தகங்கள் எழுதுமாறு நான் தன்னலக் கழகத் தலைவரை-தவறு, தமிழ் நலக் கழகத் தலைவரைத் தூண்டினேன். ‘அக நானுறு, புற நானூறு, பத்துப் பாட்டு, எட்டுத்தொகை என்றால் என் கிட்டக்கூட வர வேண்டாம்; அவற்றுக்கும் எனக்கும் வெகு வெகு வெகு தூரம்!' என்றார். 'தமிழ், தமிழ் என்று சொல்லித் தமிழால் பிழைத்துக்கொண்டு இப்படிச் சொல்லலாமா? தவறாச்சே! படிக்க எளிதாயிருக்கும் கம்பனையும் வள்ளுவனையுமாவது ஒரு பிடி பிடியுங்களேன்!' என்றேன்; 'தங்களை யாரும் பிடிக்கக் கூடாது என்பதற்காகவே அவர்கள் தங்களுடைய நூல்களைப் பிறருடைய தயவில் யாரும் படிக்க வேண்டிய அவசியமில்லாமல் செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அப்படியும் 'விடுவோமா உங்களை?' என்று பலர் அவர்களைத் தொற்றிக்கொண்டு திரிகிறார்கள். அவர்கள் போதாதென்று நானுமா அந்தக் கம்பனையும் வள்ளுவனையும் தொற்றிக்கொண்டு திரியவேண்டும்?' என்றார். 'சரி, சிலப்பதிகாரம்?' என்றேன் நான்; 'அதையும் தான் சிலர் கோவலன், கண்ணகி, மாதவி, மணிமேகலை என்று ‘பார்ட், பார்ட்'டாகப் பிய்த்து எடுத்துவிட்டார்களே?' என்றார் அவர். 'அதனால் என்ன, கண்ணகியின் கால் சிலம்பை யாரும் இதுவரை கழட்டி எடுக்கவில்லைபோல் இருக்கிறதே? நான் வேண்டுமானால் காலைப் பிடித்துக் கொள்கிறேன், நீர் கழட்டி எடும்!' என்றேன்; 'அது வேண்டுமானால் செய்யலாம்!’ என்றார் அவர். ஆனால் அதுவும் அவருடைய பேச்சுக்குப் பயன்பட்ட அளவு எழுத்துக்குப் பயன்படவில்லை. அதற்கும் சளைக்கவில்லை நான்;