விந்தன்
21
வேனா? விட்டால் நான் ரிஸப்ஷனிஸ்ட் ஆவேனோ? உட்காருங்கள், கதையைக் கேளுங்கள்" என்று கதை சொல்ல ஆரம்பிக்க, போஜனும் நீதிதேவனும் வழக்கம் போல் கொட்டாவி விட்டுக் கொண்டே கதை கேட்கலாயினர் என்றவாறு... என்றவாறு... என்றவாறு....
"கேளாய், போஜனே இந்த மலையில்லா மலைச் சாலைக்குத் தெற்கே 'பரங்கிமலை, பரங்கிமலை' என்று ஒரு பதி உண்டு. அந்தப் பதியிலே 'முருக்கமரம், முருக்கமரம்' என்று ஒரு முருக்கமரம் இல்லாவிட்டாலும் 'முருங்கை மரம், முருங்கை மரம்' என்று ஒரு முருங்கை மரம் உண்டு. அந்த முருங்கை மரத்தடியிலே "'காளி கோயில்" என்று ஒன்று இல்லாவிட்டாலும், 'பிள்ளையார் கோயில்' என்று ஒன்று உண்டு. அந்தப் பிள்ளையார் கோயிலுக்கு ஒரு நாள் மாலை ஒரு பிள்ளையாண்டான் வந்து, முறைப்படி மூன்று முறை சுற்றி, மூன்று தோப்புக்கரணங்கள் போட்டு, மூன்று முறை கன்னத்தில் போட்டுக் கொண்டு, மூன்று குட்டுக்கள் குட்டிக்கொண்டு, கை குவித்து, சிரம் தாழ்த்தி, 'ஐயா, விநாயகரே! அம்மாவைப்போல் பெண் கிடைக்காத வரை நான் கலியாணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று நீர்தான் அரசமரத்தடியிலும், ஆலமரத்தடியிலும் உட்கார்ந்து அடம் பிடித்ததெல்லாம் போதாதென்று, இப்பொழுது முருங்கை மரத்தடியிலும் வந்து உட்கார்ந்து அடம் பிடித்துக் கொண்டிருக்கிறீர்! எனக்கு அப்படியெல்லாம் ஒன்றுமில்லை; என் பாட்டியைப் போல ஒரு பெண் கிடைத்தால் கூடப் போதும், பரம சந்தோஷமாகக் கலியாணம் செய்து கொண்டு விடுவேன். அதற்காக உமக்கு ஏதாவது வேண்டுமானால் தயங்காமல் கேளும், தாரளமாகக் கொடுக்கிறேன்! என்ன இருந்தாலும் நான் மனிதன்; பிறருக்காக ஒரு பைசா செலவழிக்கத் தயாராயில்லா விட்டாலும் எனக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராயிருப்பேன்!' என்று 'வேண்டு வேண்டு' என வேண்ட, அப்போது