பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240

13

பதின்மூன்றாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் சூரியா சொன்ன

மாண்டவன் மீண்ட கதை

"கேளாய், போஜனே! 'பசியெடுத்தான் பட்டி, பசியெடுத்தான் பட்டி’ என்று ஒரு கிராமம் உண்டு. அந்தக் கிராமத்திலே ‘குப்பன், குப்பன்’ என்று ஒரு குடியானவன் உண்டு. அவனுக்கு ஒரு தவமும் செய்யாமலேயே ஒன்பது குழந்தைகள் பிறந்தன. கொஞ்சம் வளர்ந்ததும் ஊருக்கு ஒன்றாகச் சொல்லிக்கொள்ளாமல் ஓடிப்போனவை போக, பாக்கி இருந்தவை இரண்டு. அவற்றில் ஒன்று ஆண்; இன்னொன்று பெண். பையனின் பெயர் சப்பாணி; பெண்ணின் பெயர் வெள்ளரி. அந்த வெள்ளரி தாவணி போட ஆரம்பித்ததுதான் தாமதம், கிராமத்துக் காளைகள் அனைத்தும் அவளைச் சுற்றிச் சுற்றி வந்து வட்டமிட்டன. ‘இதென்னடா, வம்பு! இவளை எவன் கையிலாவது பிடித்துக் கொடுக்காதவரை இந்தத் தொல்லை தீராதுபோலிருக்கிறதே? இந்த வருஷமாவது நாலு தூறல் விழுந்தால் இருக்கிற இடத்திலே எள்ளாவது, கொள்ளாவது விதைத்துப் பார்க்கலாமென்று நினைத்தேன். ஒரு தூறல்கூட விழ வில்லை. நாடாள வரும் மந்திரிகளோ மழை பெய்தால் அதற்குக் காரணம் நாங்கள்தான் என்று மார் தட்டிச் சொல்கிறார்கள்! பெய்யாவிட்டாலோ அதற்குக் காரணம் யார் என்று சொல்லாமலே இருந்துவிடுகிறார்கள். இப்போது நாம் இந்தப் பெண்ணின் கலியாணத்துக்கு என்ன செய்வது?'