பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

போய்விட்டாயா?' என்று அலற, உள்ளே இருந்தபடி எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த வெள்ளரி, 'ஐயோ அண்ணா! இதற்குத்தானா நீ பட்டணம் போனாய்?' என்று தன் தலையைச் சுவரில் மோதி அழுவாளாயினள்.

பார்த்தார் கர்ணம்; 'இனி அழுவதில் பிரயோசனம் இல்லை; பட்டணத்துக்குப் போய் அவனுடைய பிணத்தைக் கொண்டுவரப் பாருங்கள்!’ என்றார். 'அதற்கும் பாழாய்ப் போன பணம் வேண்டுமே, எங்கே போவேன்?’ என்றான் குப்பன்; 'அப்படியானால் ஒன்று செய். மொத்தம் இருந்த ஒன்பதில் ஏழு போக, பாக்கி இருந்தது இரண்டு. அந்த இரண்டிலும் ஒன்று போக, பாக்கி இருப்பது ஒன்று என நினைத்துக்கொள்!' என்றார் கர்ணம். அப்படியே நினைத்துக் குப்பன் தன் மகனை மறந்து, அவனுக்குரிய ஈமக்கடன்களை மட்டும் மறக்காமல் செய்து முடிப்பானாயினன்.

இது நடந்த இரண்டாம் நாள் இரவு யாரோ வந்து தன் வீட்டுக் கதவைத் தட்ட, ‘யார் அது?’ என்று குப்பன் உள்ளே இருந்தபடியே கேட்க, ‘நான்தான் அப்பா, சப்பாணி! கதவைத்திற, அப்பா!’ என்று வெளியே இருந்தபடி சப்பாணி குரல் கொடுக்க, அதைக் கேட்ட வெள்ளரி, 'ஐயோ, பிசாசு! அண்ணன் பிசாசா வந்து அலைகிறான், அப்பா!' என்று அலற, 'அடப் பாவி! செத்தும் உன்னை விடவில்லையா, இந்த வீட்டு ஆசை? போடா நாயே, போ!’ என்று குப்பன் உள்ளே இருந்தபடியே அவனைக் கொஞ்சம் செல்லமாக விரட்ட, 'இல்லை, அப்பா! நான் செத்துப் போகவில்லை; உயிரோடுதான் இருக்கிறேன். கதவைத் திற, அப்பா!' என்று சப்பாணி வெளியே இருந்தபடி கெஞ்ச, 'திறக்காதே, அப்பா! அது உள்ளே வந்து நம்மை என்ன செய்யுமோ, என்னவோ?’ என்று வெள்ளரி குப்பனைத் தடுக்க, 'நானா திறப்பேன்? செருப்பால் அடி, ஜோட்டால் அடி! காடு போன பிள்ளை உயிரோடு வீடு திரும்பி வந்தால்கூடச் சேர்க்கக்கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்களே, அது எனக்குத் தெரியாதா?