பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/246

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

243

நாளைக்கு ஆகட்டும், பூசாரி பொன்னப்பனைக் கூட்டி வந்து, பெரிய பூஜை போட்டு, இந்தப் பேயை ஒரேயடியாக ஒழித்துக் கட்ட ஏற்பாடு செய்கிறேன்!' என்று அவன் கருவ, சப்பாணி சிரித்து, 'ராத்திரியாயிருக்கவே இப்படிப் பயப்படுகிறீர்கள் போல் இருக்கிறது! நான் வேண்டுமானால் இந்தத் திண்ணையிலேயே படுத்துக் கொள்கிறேன். பொழுது விடிந்ததும் நீங்களாகவே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள் - நான் பிசாசா, இல்லையா என்று!' என்பதாகத் தானே சொல்லி விட்டுத் திண்ணையில் படுக்க, 'ஏதேது, இந்தப் பேய் அவ்வளவு லேசில் இந்த வீட்டை விட்டுப் போகாது போலிருக்கிறதே!' என்பதாகத்தானே குப்பன் கதவைத் திறந்து கொண்டு கழியும் கையுமாக வெளியே வந்து, ‘போகிறாயா, இல்லையா?' எனச் சப்பாணியை அடித்து விரட்ட, அக்கம் பக்கத்திலிருந்தவர்களும் அந்த அரவம் கேட்டு ஆளுக்கொரு கழியுடன் அங்கே வந்து, 'போ, காட்டுக்குப் போ! வீட்டுக்கு வராதே, காட்டுக்குப் போ!’ என்று அவனை 'அடி, அடி' என்று அடித்து விரட்டுவாராயினர்.

வேறு வழியின்றிச் சப்பாணி ஓட, அதுகாலை நல்ல வேளையாக அந்த வழியே வந்த மிஸ்டர் விக்கிரமாதித்தர் அவனைக் கண்டதும் தம் காரை நிறுத்தி, 'என்ன சமாசாரம்?' என்று விசாரிக்க, 'முதலில் அவர்கள் கையிலுள்ள கோல்களைக் கீழே போடச் சொல்லுங்கள்; நான் என்னுடைய கதையைச் சொல்கிறேன்!' என்று அவன் சொல்ல, அவர் அப்படியே செய்துவிட்டு, 'அது என்ன கதை, சொல்?' என்று கேட்க, அவன் சொன்ன கதையாவது: