பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

247

முடிக்கும் வரை தலைமறைவாக இருக்கலாம் என்று எண்ணி நான் இங்கே ஓடோடி வந்தேன். இவர்கள் என்னடா என்றால், 'பேய், பிசாசு!' என்று என்னை அடித்து விரட்டுகிறார்கள்!' என்பதாகத்தானே அவன் தன் கதையைச் சொல்லி முடிக்க, விக்கிரமாதித்தர் சிரித்து, 'ஓ, புத்திசாலிகளே! பேய், பிசாசுகளில் கால்கள் கீழே பதியாமல் கொஞ்சம் உயர்ந்து நிற்கும் என்று உங்கள் பெரியோர் சொல்லக் கேட்ட தில்லையா நீங்கள்? அதை இப்போது மறந்து விட்டீர்களா? இவன் காலைப் பாருங்கள்; நன்றாகப் பாருங்கள்!’ என்று சப்பாணியின் காலைக் காட்ட, அவர்கள் குனிந்து அவன் காலைப் பார்த்துவிட்டு, 'இவன் பிசாசு இல்லைடோய், நம்ம சப்பாணி!' என்று தங்கள் கைகளிலிருந்த கோல்களைக் கீழே போட, 'இந்தக் காலத்தில் யாரும் ஏமாந்துதான் ஏதாவது கொடுப்பார்களே தவிர, ஏமாறாமல் ஒன்றும் கொடுக்க மாட்டார்கள். யாரோ ஒரு நடிகர் ஏமாந்தோ ஏமாறாமலோ ரூபாய் இரண்டாயிரம் தருவதாகச் சொல்கிறார். அதைக் கொண்டு வெள்ளரியின் கலியாணத்தை நடத்தி வையுங்கள். அதுவரை சப்பாணியைத் தலை மறைவாக இருக்கவிடுங்கள்!' என்று சொல்ல, ‘அப்படியே செய்கிறோம், அப்படியே செய்கிறோம்' என்று அவர்கள் அவனை அழைத்துக் கொண்டு போய் ராஜோபசாரம் செய்து, அவன் விருப்பப்படியே அவனை 'அண்டர் கிரவுண்டு'க்கு அனுப்பி வைப்பாராயினர்.

தின்மூன்றாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான சூரியா இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, "நாளைக்கு வாருங்கள்; பதினான்காவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் பூரணி சொல்லும் கதையைக் கேளுங்கள்!’ என்று சொல்ல, "கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?" என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம் போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்கி வருவது காண்க... காண்க...காண்க......