பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/254

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

251

என்றார் அவர் அப்பொழுதும் விடாமல். ‘இல்லை, மக்கள் மன்றம் இது. ஆகவே, இது மக்களுக்காகவே வேலை செய்கிறது!’ என்றேன் நான் அதற்கும் அசைந்து கொடுக்காமல். 'அட, சரிதான் ஐயா! யார்தான் இந்தக் காலத்தில் மக்களுக்காக வேலை செய்யவில்லை? எல்லோரும் மக்களுக்காகத் தான் வேலை செய்கிறோம். இப்படிச் சொல்லி மக்களைத் தான் ஏமாற்றுகிறோம் என்றால், நம்மை நாமே வேறு ஏமாற்றிக் கொள்ள வேண்டுமா, என்ன? விஷயம் என்ன வென்றால், எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு மக்களிடையே கொஞ்சம் அதிருப்தி காணப்படுகிறது. ஆகவே, இந்தத் தேர்தலின் முடிவு என்ன ஆகுமோ, என்னவோ என்று எங்கள் வேட்பாளர் கொஞ்சம் பயப்படுகிறார். எதிர்க்கட்சி வேட்பாளரைப் பற்றி அவருக்குக் கவலையில்லை; அந்தக் கட்சியின் மேல் மக்களுக்குள்ள வெறுப்புத் தீர இன்னும் பத்து வருடங்களாவது ஆகும் என்று அவர் நினைக்கிறார். இப்போது எங்கள் பயமெல்லாம் யாரிடம் இருக்கிறது என்றால், சுயேச்சையாளர்களிடம்தான் இருக்கிறது. ஐந்தோ, பத்தோ வாங்கிக்கொண்டு உங்கள் சுயேச்சையாளர்களில் ஒருவரையோ, அல்லது இருவரையுமேயோ வாபஸ் வாங்கிக் கொள்ளச் செய்ய முடியுமா உங்களால்? அதைக் கேட்கத்தான் நான் வந்தேன்!' என்று அவர் உடனே விஷயத்துக்கு வந்தார். 'ஐந்தோ, பத்தோ என்றால்?’ என்று நான் இழுத்தேன். 'ஐயாயிரம், பத்தாயிரம் என்ற அர்த்தம்; அதாகப்பட்டது, இங்கெல்லாம் ஒரு ரூபா என்றால் ஓராயிரம் ஐயா, ஓராயிரம். என்ன, புரிந்ததா?’ என்றார் அவர். ‘புரிந்தது, புரிந்தது!’ என்றேன் நான். 'சரி, இந்தாருங்கள் ரூபா ஐயாயிரம்; முதலில் இதைக் கொண்டு போய்க் காரியத்தை முடிக்கப் பாருங்கள்; முடிந்த பின் மேற்கொண்டு ரூபா ஐயாயிரம் வேண்டுமானாலும் எங்கள் வேட்பாளர் கொடுக்கத் தயாராயிருக்கிறார்!' என்றார் அவர். நான் அதை வாங்கிக்கொண்டு, 'மக்களுக்காக உடல், பொருள், ஆவி மூன்றையும் நாங்கள் தத்தம் செய்யத் தயார், தயார், தயார்