பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

257

வருவதில்லை; கையிலிருந்தும் வருவதில்லை. அது பேனாவிலிருந்து வருகிறது!’ என்பதாகத்தானே. அவர்கள் சொன்னதையும் அவர் உடனே மறுத்துவிட்டு, மேலும் எழுதுவாராயினர்.

இந்த நிலையில், 'எழுத்தாளன் என்பவன் தன்னால் உருவாவதும் இல்லை; பிறரால் உருவாக்கப்படுவதும் இல்லை. அவன் தானாகவே பிறக்கிறான்!' என்று ஏதோ ஒரு பத்திரிகையில் வெளியாகியிருந்த துணுக்கு ஒன்று அவரை ஒரு கணம் துணுக்குற வைக்க, 'ஆஆஆமாம், எழுத்தாளன் பிறக்கும்போதே பேனாவைக் கையில் பிடித்துக்கொண்டு பிறக்கிறானாக்கும்? சுத்த அபத்தம்!' என்ற மறுகணமே அவர் அதையும் சமாளித்துக்கொண்டு, மேலும் மேலும் எழுதி, ‘குவி, குவி' என்று குவிப்பாராயினர்.

கதை, கட்டுரை, நாவல், நாடகம், கவிதை-எதையும் விடவில்லை அவர்; பின்னால் அவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தானோ என்னவோ, வகைக்கு நூறு எழுதி முடிக்கும் வரை அவர் ஓயவேயில்லை!

‘நூறு அவ்வளவு நல்ல எண் இல்லை; குறைந்த பட்சம் நூற்று ஒன்றாகவாவது எழுதி முடியுங்கள்!’ என்று அவருடைய ஆத்ம நண்பர்களில் ஒருவர் சொல்ல, 'சரி' என்று வகைக்கு ஒன்றாக மேலும் எழுதி, எல்லாவற்றையும் நூற்று ஒன்று, நூற்று ஒன்று என்று ஆக்கிய பின்னரே அவர் தம் பேனாவைக் கீழே வைப்பாராயினர்.

எல்லாம் முடிந்தது; அடுத்தாற்போல் அவர் எழுதியவை அச்சு வாகனம் ஏற வேண்டியதுதான் பாக்கி. அதற்காகத் தாம் எழுதியவற்றில் வகைக்கு இரண்டை எடுத்துக்கொண்டு அவர் ஒவ்வொரு பத்திரிகை அலுவலகத்தின் மேலும் படையெடுக்க, அவருடைய படையெடுப்பைக் கண்டு அஞ்சியோ என்னவோ, ‘கதை, கட்டுரை எதுவும் நேரில் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது; தபால் மூலமே அனுப்ப

மி.வி.க -17