பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

260

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

சீருடை என்று ஒன்று உண்டு. அந்த முறையில் எழுத்தாளருக்கும் சீருடை என்று ஒன்று உண்டு, உண்டு. அந்தச் சீருடை ஜிப்பாவும் வேட்டியும்தான் என்று சில எழுத்தாளர்கள் சொல்லாமல் சொல்வது உண்டு, உண்டு, உண்டு!' என்று சொல்ல, 'இதோ, அவற்றை இன்றே அணிந்தேன்!' என்று அவர் உடனே வேட்டியையும் ஜிப்பாவையும் வாங்கி அணிய, 'அதெல்லாம் அந்த நாள் சீருடை; இந்த நாள் சீருடை டெரிலின் ஷர்ட்டும், டெரின் பாண்ட்டும் ஐயா, டெரின் பாண்ட்டும்!' என்று இன்னொரு நண்பர் சொல்ல, 'ஆமாம்! ஆமாம்; அதெல்லாம் பிற்போக்கு எழுத்தாளர் அணியும் சீருடை! நான் முற்போக்கு எழுத்தாளராக்கும்’ என்று அன்றே அவர் ஜிப்பாவையும் வேட்டியையும் களைந்து எறிந்துவிட்டு, டெரிலின் ஷர்ட்டும் டெரின் பாண்ட்டும் அணிவாராயினர்.

இப்படியாகத்தானே எழுதுவது ஒன்றைத் தவிர பாக்கி எல்லாவற்றிலும் வெற்றி கண்டு விட்ட அவர், 'இனி நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று ஒரு நாள் தமக்குத் தாமே ஒரு கேள்வியைப் போட்டுக்கொண்டு, 'எழுத்தாளர் சங்கத்தில் அங்கத்தினராக வேண்டும்!' என்று அதற்குரிய பதிலையும் தமக்குத் தாமே சொல்லிக்கொண்டு, எழுத்தாளர் சங்கச் செயலரை அணுகித் தம்முடைய விருப்பத்தைத் தெரிவிக்க, அவர் தம் மகிழ்ச்சியை முதற்கண் தெரிவித்துக் கொண்டு, பழுத்துப் போன விண்ணப்பத் தாள் ஒன்றை எடுத்துப் படுபவ்வியமாக அவரிடம் நீட்டுவாராயினர்.

அதை வாங்கிப் பார்த்தார் அழகப்பர்; அதில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளில் ஒன்றே ஒன்றுக்கு மட்டும் என்ன எழுதுவது என்று தெரியவில்லை அவருக்கு. அதாகப்பட்டது, "இதுவரை தங்களால் எழுதப்பட்ட கதைகள் ஏதாவது எந்தப் பத்திரிகையிலாவது வெளியாகியிருக்கின்றனவா? வெளியாகியிருந்தால் அந்தப் பத்திரிகைகளில் இரண்டின் பெயர்களை இங்கே குறிப்பிடவும்' என்பதே