விந்தன்
263
வாங்கி வெளியிட, அதனால் தம் ஜன்மமே சாபல்யமுற்றது போன்று அவர் தலை நிமிர்ந்து நடப்பாராயினர்.
இங்ஙனமாகத்தானே தம்முடைய லட்சியத்தை எட்டிப் பிடித்து அவர், ஆரம்ப காலத்தில் தாம் எழுதி அனுப்பியவற்றை அப்படியே திருப்பி அனுப்பிய அத்தனை பத்திரிகை எழுத்தாளர்களையும் எப்படி மட்டம் தட்டுவது, எங்ஙனம் பழி தீர்த்துக் கொள்வது என்று அதி அதி அதி தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த காலை, 'அதற்குரிய ஒரே வழி நீங்கள் உடனே போய் மிஸ்டர் விக்கிரமாதித்தரைப் பார்ப்பதுதான்!' என்று அவருடைய அருமை நண்பர்களில் ஒருவர் சொல்ல, 'நல்ல வேளை. ஞாபகப்படுத்தினீர்கள்!' என்று அவர் அக்கணமே சாட்சாத் விக்கிரமாதித்தரைத் தேடி ‘ஓடு, ஓடு’ என்று ஓடுவாராயினர்.
தமக்கு முன்னால் இறைக்க இறைக்க வந்து நின்ற அழகப்பரை நோக்கி, ‘யார் நீங்கள்? எங்கிருந்து வருகிறீர்கள்?’ என்று விக்கிரமாதித்தர் விசாரிக்க, 'ஐயகோ! இன்னுமா என்னை ‘யார் நீங்கள்?’ என்று வாய் கூசாமல் கேட்கிறீர்கள்? என்னுடைய எழுத்தோவியங்கள்தான் இப்போது எத்தனையோ பத்திரிகைகளில் வெளியாகிக் கொண்டிருக்கின்றனவே, அவற்றை நீங்கள் பார்க்கவில்லையா?' என்று அழகப்பர் பதற, 'பார்த்தேன், பார்த்தேன்; உங்கள் பெயர்?’ என்று விக்கிரமாதித்தர் மறு படியும் அவரை சோதனைக்குள்ளாக்க, ‘பார்த்த லட்சணமா என் பெயர் என்ன என்று கேட்கிறீர்கள்? அவமானம், அவமானம், ஓர் எழுத்தாளன் தன் பெயரைத் தானே சொல்லிக் கொள்வது போன்ற அவமானம் இந்த உலகத்தில் வேறு ஏதாவது உண்டா, உண்டா, உண்டா? ஆனாலும் சொல்கிறேன், சொல்லித் தொலைக்கிறேன்-என் பெயர், என் பெயர்-அடக், கடவுளே! இந்தச் சமயத்தில்தானா அது எனக்கே மறந்து போய்த் தொலைய வேண்டும்?-ஆ! வந்துவிட்டது, ஞாபகம் வந்துவிட்டது! அழகப்பன்,