பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

264

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

அழகப்பன்!’ என்று ஒரு முறைக்கு இருமுறையாக அழகப்பர் தம் பெயரை அழுத்தம் திருத்தமாகச் சொல்ல, 'அழகப்பரா! இப்போது நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? வீட்டிலிருந்து வருகிறீர்களா? இல்லை, வேறு எங்கிருந்தாவது வருகிறீர்களா? 'என்று கேட்டுக்கொண்டே விக்கிரமாதித்தர் அவரைச் சற்றே சந்தேகக் கண் கொண்டுபார்க்க, 'நீங்கள் நினைப்பது சரி! என்னை 'அங்கே' அனுப்பி வைக்கத்தான் இங்குள்ள பத்திரிகையாளர்கள் அத்தனை பேரும் முயன்றார்கள். நல்ல வேளையாக எழுத்தாளர் சங்கச் செயலர் என்னைத் தடுத்தாட் கொண்டார்; அதிலிருந்து நான் தப்பிப் பிழைத்தேன். இப்போது என்னைப் பழி வாங்கிய அத்தனை பத்திரிகை எழுத்தாளர்களையும் உடனே நான் பழிக்கு பழி வாங்க வேண்டும். அதற்கு நீங்கள்தான் வழி காட்ட வேண்டும்!' என்று அழகப்பர் தாம் வந்த விஷயத்துக்கு வர, 'அது என்ன பிரமாதம்! அவர்களுடைய கொட்டத்தை அடக்க நீரும் ஒரு சங்கத்தை உடனே ஆரம்பித்துவிட வேண்டியது தான்!' என்றார் விக்கிரமாதித்தர்; 'என்ன சங்கம்?' என்று கேட்டார் அழகப்பர். ‘எழுத்தாளர் சங்கம்தான்!' என்றார் அவர்; ‘அதுதான் இருக்கிறதே!' என்றார் இவர். 'இருந்தால் என்ன? சென்னைக்கு ஒன்றாக இருந்த அதுதான் இப்போது ஜில்லாவுக்கு ஒன்றாகி, அதுவும் போதாதென்று நகரத்துக்கு ஒன்றாகி, அதுவும் போதாதென்று ஊருக்கு ஒன்றாகி, அதுவும் போதாதென்று தெருவுக்கு ஒன்றாய் ஆரம்பமாகிக் கொண்டிருக்கிறதே, நீரும் உம்முடைய தெருவில் ‘எழுத்தாளர் சங்கம்’ என்று ஒன்றை ஆரம்பியும்; அதற்கு உம்மையே தலைவராகப் போட்டுக் கொள்ளும். நீர் எப்பொழுது எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகி விடுகிறீரோ, அப்பொழுதே இந்த உலகத்திலுள்ள அத்தனை எழுத்தாளர்களுக்கும் இல்லையில்லை, இந்தத் தமிழகத்திலுள்ள அத்தனை எழுத்தாளர்களுக்கும் தலைவராகிவிடுகிறீர்! அப்புறம் என்ன, அவர்களெல்லாம் உமக்குத் தொண்டர்கள் தானே? இருந்து விட்டுப் போகட்டும்! போம் போம், போய்